தமிழ்நாடு செய்திகள்

திருத்தணியில் வடமாநில இளைஞர் மீது தாக்குதல்.. தமிழினத்திற்கான தலைகுனிவு - சீமான்

Published On 2025-12-30 23:40 IST   |   Update On 2025-12-30 23:40:00 IST
  • குடும்ப வறுமைக்காகப் பிழைப்பு தேடி வந்த வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்குள் தாக்கப்படுவதுஏற்றுக்கொள்ள முடியாத பெருங்கொடுமை.
  • கஞ்சா விற்பனையின் தலைநகராக தமிழ்நாடு மாறியுள்ளது.

திருத்தணி ரெயில் நிலையம் அருகே இளைஞர்கள் சிலர் வடமாநில வாலிபர் ஒருவரை சுற்றிவளைத்து அரிவளாால் வெட்டி ரீல்ஸ் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில்,

"திருத்தணியில் புலம்பெயர் தொழிலாளி சிராஜ் மீதான போதை சிறார்களின் கொலைவெறித் தாக்குதல் ஒட்டுமொத்த தமிழினத்திற்கான தலைகுனிவு.

திருத்தணி சென்ற சென்னை புறநகர் ரயிலில் ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி தம்பி சிராஜ் மீது, போதைப் பழக்கத்திற்கு அடிமையான நான்கு இளம் சிறார்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள கொடூர காட்சிகள் நெஞ்சை உலுக்குகிறது.

திராவிட மாடல் ஆட்சியில் கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கம், தமிழிளம் தலைமுறையை எந்த அளவிற்கு மிக மோசமாகச் சீரழித்துள்ளது என்பதையே புலம்பெயர் தொழிலாளி சிராஜ் மீதான கொடுந்தாக்குதல் காட்டுகிறது.

அத்தனை சமூக அவலங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் கையாலாகாத்தனம் வன்மையான கண்டனத்துக்குரியது.

வட மாநிலத் தொழிலாளர்களால் தமிழ் மக்கள் கொடூரமாகத் தாக்கப்படுவது, கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத கொடுங்குற்றமோ அதே அளவிற்கு, குடும்ப வறுமைக்காகப் பிழைப்பு தேடி வந்த வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்குள் தாக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத பெருங்கொடுமையாகும்.

தமிழ்நாட்டில் அரசே நடத்தும் மலிவுவிலை மதுக்கடைகளால் சட்டம்-ஒழுங்கு முற்றாகச் சீரழிந்து கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் வேகமாகப் பெருகிவருகின்றன.

சொந்த இரத்த உறவுகள் கூடச் சிறு சிறு முன்பகைக்காக தங்களுக்குள் ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டு சாகும் சமூகப்பேரவலம் நிகழ்வதற்கு அரசு விற்கும் மதுதான் அடிப்படை காரணமாகிறது.

அதுமட்டுமின்றி திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கஞ்சா விற்பனை கட்டுக்கடங்காத அளவிற்கு வளர்ந்து கஞ்சா விற்பனையின் தலைநகராக தமிழ்நாடு மாறியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு நடத்தும் டாஸ்மாக் மது மற்றும் கஞ்சா போதையில்தான் நடைபெறுகிறது.

எனவே அரசு மது விற்பனையைத் தடைசெய்தாலே தமிழ்நாட்டில் நடைபெறும் 95% கொடுங்குற்றங்கள் நடைபெறாமலேயே தடுத்து நிறுத்த முடியும். அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் காரணமாகத் திகழும் மது விற்பனையைத் தடை செய்வதில் திமுக அரசிற்கு என்ன தயக்கம்?

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த போராடிய திமுக, தமது ஆட்சிக்காலத்தில் அதனை நடைமுறைப்படுத்த மறுப்பது ஏன்?

அதிமுக ஆட்சியில் குட்காவுக்கு எதிராக சட்டமன்றம் வரை பேசிய திமுக, தன்னுடைய ஆட்சியில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கஞ்சா விற்பனை குறித்து வாய் திறவாதது ஏன்?

'போதையின் பாதையில் இளைஞர்கள் செல்ல வேண்டாம்' என்று காணொளி பேசினால் மட்டும் போதைப்பொருட்கள் புழக்கம் ஒழிந்துவிடுமா? அல்லது தமிழ்நாட்டு இளைஞர்கள் அதைப் பயன்படுத்தாமல் தடுத்திடத்தான் முடியுமா?

இளம் சிறார்கள் போதையில் கொடூர ஆயுதங்களுடன் தாக்கிய காணொளிக்கு திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது? மது, கஞ்சா போதையைக் கட்டுப்படுத்தாது இன்னும் எத்தனை உயிர்களை திமுக அரசு பலி கொடுக்கப்போகிறது?

பட்டப்பகலில் படுகொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் நடைபெறாத நாட்களே இல்லை என்னும் அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு போதைப்பொருட்கள் புழக்கத்தால் முற்று முழுதாகச் சீரழிந்துள்ள நிலையில், திமுக அரசு கஞ்சா விற்பனையைத் தடுக்காததும், மது விலக்கை நடைமுறைப்படுத்த மறுப்பதும் ஏன்?

மக்களின் நலனைவிட மதுவினால் வரும் வருமானம்தான் திமுக அரசிற்கு முதன்மையானதா? இதற்குப் பெயர்தான் திராவிட மடலா? வெட்கக்கேடு?

ஆகவே, வடமாநில தொழிலாளி தம்பி சிராஜ் மீதான கொலைவெறித் தாக்குதல்போல இனி ஒரு கொடூர நிகழ்வு நடந்திடாமல் தடுத்திடவும், சீரழியும் தமிழிளம் தலைமுறையைக் காத்திடவும், மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்தி டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுவதோடு, கஞ்சா விற்பனையை முற்று முழுதாக தடுக்க போர்க்கால அடிப்படையில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.   

Tags:    

Similar News