செய்திகள்

திண்டுக்கல் பஸ் நிலைய விரிவாக்க பணியால் பரிதவிக்கும் பயணிகள்

Published On 2018-08-23 17:55 IST   |   Update On 2018-08-23 17:55:00 IST
திண்டுக்கல் பஸ்நிலைய விரிவாக்க பணியால் பயணிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்:

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட திண்டுக்கல்லில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருகி வரும் மக்கள் தொகை, வாகன நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் காரணமாக பஸ் நிலையத்தை புறநகர் பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இதற்கு அனுமதி கிடைக்காததால் இத்திட்டம் கைவிடப்பட்டது. இதனையடுத்து ரூ.5 கோடி மதிப்பில் பஸ்நிலையம் விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பழனி பஸ்கள் நிறுத்தும் பகுதியில் உள்ள கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு சுவர் எழுப்பி பஸ்கள் உள்ளே வரவும் வெளியே செல்லவும் தனித்தனி பாதைகள், பயணிகள் காத்திருப்பு அறை உருவாக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கரூர், சேலம் பஸ்கள் நிற்கும் பகுதியிலும் கடைகள் இடிக்கப்பட்டு அப்பகுதியில் பார்க்கிங் வசதியுடன் வணிக வளாகம் அமைக்க பணிகள் நடந்து வருகிறது. ஆனால் இப்பகுதியில் பயணிகள் நிற்பதற்கும், ஒதுங்குவதற்கும் இட வசதி இல்லை.

மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும் வானமே கூரையாக தவிப்பில் இருந்து வருகின்றனர். குறிப்பாக காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருவதால் விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளனர். #tamilnews
Tags:    

Similar News