செய்திகள்

பா.ஜனதா அலுவலகத்தில் வாஜ்பாய் அஸ்திக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

Published On 2018-08-23 04:56 GMT   |   Update On 2018-08-23 05:39 GMT
தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்துக்கு இன்று காலை நேரில் சென்று வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினார். #AtalBihariVajpayee #MKStalin
சென்னை:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி டெல்லியில் காலமானார். அவரது அஸ்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டது.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மூத்த தலைவர்கள் அஸ்தியை எடுத்து வந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வேனில் வாஜ்பாய் அஸ்தி கலசங்கள், தியாகராய நகரில் உள்ள பா.ஜனதா அலுவலகமான கமலாலயத்துக்கு ஊர்வலமாக இரவு 7.30 மணிக்கு கொண்டு வந்தனர்.

அங்கு பாரத மாதா சிலைக்கு முன்பு வைக்கப்பட்ட 7 அஸ்தி கலசங்களுக்கும் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்பட பலரும் நேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.

இன்று காலை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றிருந்தனர்.

கட்சி அலுவலகம் வந்த மு.க.ஸ்டாலினை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

வாஜ்பாய் அஸ்திக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் அங்கு அமர்ந்திருந்தார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரிடம் சோகத்தை பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டார். அதன் பிறகு கனிமொழி எம்.பி. வந்து வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினார்.



வாஜ்பாய் அஸ்திக்கு இன்று முழுவதும் அஞ்சலி செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதைத் தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் அஸ்தியை கரைக்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட உள்ளது.

வாஜ்பாய் அஸ்தியை சென்னை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, ராமேசுவரம், ஈரோடு, தஞ்சை ஆகிய 7 இடங்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. #AtalBihariVajpayee #MKStalin
Tags:    

Similar News