செய்திகள்

சிவகங்கையில் 7½ லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டை - கலெக்டர் லதா தகவல்

Published On 2018-08-21 13:51 GMT   |   Update On 2018-08-21 13:51 GMT
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 7 லட்சத்து 55 ஆயிரம் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் லதா தெரிவித்தார்.
சிவகங்கை:

சிவகங்கையை அடுத்த வாணியங்குடி ஊராட்சியில் வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் லதா தலைமை தாங்கி, விவசாயிகளுக்கு மண்வள அட்டையை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப மண் பரிசோதனை செய்து விவசாய பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மூலமாக வேளாண் உதவி அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் மூலம் மண்வள அட்டை வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விவசாயிகள் அதிக லாபம் பெற மண்ணின் தன்மைக்கேற்ப பயிர் வகைகளை பயிரிட வேண்டும். இந்த திட்டம் சிவகங்கை மாவட்டத்தில் 2015-16-ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, அதாவது கடந்த 4 ஆண்டுகளில் மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 55 ஆயிரத்து 653 விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு திட்டங்கள் விவசாயிகளுக்காக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி அலுவலர்களின் ஆலோசனைப்படி விவசாயப் பணிகளை மேற்கொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News