செய்திகள்

மேட்டூர் உபரி நீரை தேக்கி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- தேமுதிகவினர் கலெக்டரிடம் மனு

Published On 2018-08-20 16:17 GMT   |   Update On 2018-08-20 16:17 GMT
வீணாக கடலில் கலக்கும் மேட்டூர் உபரி நீரை தேக்கி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரி தே.மு.தி.க.வினர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

சேலம்:

தே.மு.தி.க. உயர்மட்ட குழு உறுப்பினர் ஏ.ஆர். இளங்கோவன் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணியிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

மேட்டூர் அணை நிரம்பும் காலங்களில் அதன் உபரி நீரை கடலில் வீணாக கலக்க விடாமல் சேலம், நாமக்கல், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேக்கி வைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டம் வகுத்திட வேண்டும்.

நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க காவிரி ஆற்றில் இருந்து கால்வாய்கள் அல்லது மோட்டார் பம்ப் உந்து குழாய்கள் அமைத்து சரபங்கா நதி மற்றும் திருமணி முத்தாற்றில் இணைக்கலாம். மேலும் வசிஷ்ட நதியிலும் இணைக்கலாம். இதனால் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். உணவு உற்பத்தி பெரிய அளவில் பெருகும். வறட்சி காலங்களில் குடிநீர் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்க முடியும். ஆகவே, சேலம் மாவட்ட மக்களின் எதிர்ப்பார்ப்பு திட்டத்தை அரசு நிறைவேற்றிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனு கொடுக்கும்போது மாநகர், மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. சுபாரவி, அவைத் தலைவர் பூபதி, பகுதி செயலாளர் தக்காளி ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், அஷ்ரப் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News