செய்திகள்

கருணாநிதி உடலுக்கு அஞ்சலி: கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு - 22 பேர் படுகாயம்

Published On 2018-08-08 21:43 GMT   |   Update On 2018-08-08 21:43 GMT
கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை:

உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, நேற்றுமுன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நேற்று சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. அங்கு அவருடைய உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் பொதுமக்களும் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். முக்கிய பிரமுகர்களுக்கு என்று தனி வழியும், பொதுமக்களுக்கு என தனி வழியும் போலீசாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி பொதுமக்களை அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட வழியில் போலீசார் அனுப்பி வந்தனர். ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. கருணாநிதியை கடைசியாக பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் முண்டி அடித்துக்கொண்டு வரிசையில் சென்றனர். மேலும் சில இடங்களில் போலீசார் வைத்திருந்த தடுப்புக்களை தகர்த்துவிட்டு பொதுமக்கள் முன்னேறி சென்றனர். அதோடு போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி முக்கிய பிரமுகர்கள் செல்லும் பாதையில் பொதுமக்கள் நுழைந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. போலீசார், பொதுமக்களை கட்டுப்படுத்த முயன்றபோது இருதரப்புக்கும் இடையே ‘தள்ளு முள்ளு’ ஏற்பட்டது.

இதில் பொதுமக்கள் பலர் கீழே விழுந்தனர். கூட்டநெரிசலில் சிக்கி பெண் போலீஸ் அனிதா (வயது 42) உள்பட 26 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார் அவர்கள் அனைவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சென்னை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த செண்பகம் (60) என்ற பெண்ணும், ஒரு ஆணும் பரிதாபமாக உயிர் இழந்தனர். மற்ற 24 பேரும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை சரவணன் (37) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த துரை(45) என்பவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மருத்துவமனையில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த குழந்தைவேலு (62), அம்பத்தூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (71), சென்னையை சேர்ந்த தங்கராஜ் (60), சத்யா (50), கென்னடி (55), வேலூரை சேர்ந்த ஜெயராமன் (54) மற்றும் காஞ்சீபுரத்தை சேர்ந்த சேட்டு (39) ஆகிய 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட் டனர். 
Tags:    

Similar News