செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த கால அவகாசம் கேட்டு கலெக்டரிடம் மனு

Published On 2018-07-19 16:18 GMT   |   Update On 2018-07-19 16:18 GMT
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த கால அவகாசம் கேட்டு கலெக்டர் சாந்தாவிடம் பெரம்பலூர் மாவட்ட வணிகர் நலச்சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர்:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 15-ந்தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் மாவட்டம் முழுவதும் படிப்படியாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் பெரம்பலூர் நகரில் உள்ள டீக்கடை, பெட்டி கடை, மளிகை கடை, ஓட்டல்கள், ஜவுளி கடை உள்ளிட்ட கடைகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை படிப்படியாக குறைப்பதற்கு, அவற்றின் உரிமையாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் வினோத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆணையர் வினோத் வருகிற 23-ந்தேதி முதல் பெரம்பலூர் நகரில் உள்ள கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாகவும், மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால், அவற்றை பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றார்.

பிளாஸ்டிக் பொருட்கள் நிறைய கையிருப்பில் உள்ளதால் வருகிற 23-ந்தேதிக்குள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த முடியாது என்று உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த இன்னும் கால அவகாசம் கேட்டனர். இதற்கு நகராட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இது தொடர்பாக அனைத்து வியாபாரிகளின் கூட்டமைப்பு ஆன பெரம்பலூர் மாவட்ட வணிகர் நலச்சங்கத்தின் தலைவர் நடராஜன் தலைமையில் பொதுச்செயலாளர் நல்லதம்பி, பொருளாளர் ரவிச்சந்திரன், ஓட்டல் உரிமையாளர்கள் கணேசன், பாலாஜி, செல்லப்பிள்ளை உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மதியம் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் சாந்தாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்துள்ள தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுக்கு கட்டுப்படுகிறோம். ஆனால் இப்போது கையிருப்பில் பிளாஸ்டிக் பொருட்கள் நிறைய உள்ளது. அதனை விற்ற பிறகு, பிளாஸ்டிக் பொருட்களை கொள்முதல் செய்ய மாட்டோம். எனவே இந்த கையிருப்பு தீபாவளி வரை இருக்கும் என்பதால் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கால அவகாசம் வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது. மனுவை வாங்கி கொண்ட கலெக்டர் சாந்தா விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் தெரிவித்தார். 
Tags:    

Similar News