செய்திகள்

அந்தியூர் அருகே உடற்கல்வி ஆசிரியர் லாரி மோதி பலி

Published On 2018-07-02 13:53 IST   |   Update On 2018-07-02 13:53:00 IST
அந்தியூர் அருகே உடற்கல்வி ஆசிரியர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஆசிரியர் பரிதாபாக உயிரிழந்தார்.
அந்தியூர்:

அந்தியூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஆசிரியர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்து உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் கவுதமன்(வயது45). தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இவர் தனது மோட்டார் சைக்கிளில் அந்தியூர் வந்தார். பிறகு அங்கிருந்து மலைப்பகுதியில் உள்ள தாமரைகரைக்கு சென்றார். அங்கு தோட்டத்து நிலத்தை பார்வையிட சென்றார்.

தாமரைகரையில் இடங்களை பார்வையிட்டு மீண்டும் மோட்டார்சைக்கிளில் மலைப்பாதையில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார். மலைப்பகுதி அடிவாரத்தில் உள்ள வளைவில் திரும்பிய போது எதிரே அந்தியூரில் இருந்து மலையின் மேலே ஏறிய ஒரு லாரி மோட்டார்சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் மோட்டார்சைக்கிளிலிருந்து கவுதமன் தூக்கி வீசப்பட்டார். படுகாயத்துடன் துடித்து கொண்டிருந்த அவரது பின்னால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் வந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். சிறிது நேரத்தில் ஆம்புலன்சு வந்து அவரை ஏற்றி கொண்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பிறகு மேல்சிகிச்சைக்காக கோவை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு கவுதமன் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக இறந்தார்.

விபத்தில் பலியான கவுதமனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். * * * விபத்தில் பலியான உடற்கல்வி ஆசிரியர் கவுதமன்.
Tags:    

Similar News