செய்திகள்

8 வழிச்சாலை திட்டத்தை மாற்றுபாதையில் அமைக்க வேண்டும்- முக ஸ்டாலின்

Published On 2018-07-02 06:48 GMT   |   Update On 2018-07-02 06:48 GMT
சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் மக்களின் கருத்துகளை கேட்டு நிபுணர் குழு அமைத்து மாற்றுபாதையில் அமைக்க வேண்டும் என்று தஞ்சையில் நடைபெற்ற திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தஞ்சாவூர்:

திருச்சி திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்ல திருமண விழா தஞ்சையில் இன்று நடந்தது.

திருமண விழாவில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அவர் செயல்படாத தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார் என்று பேசியுள்ளார். இதை பற்றி நான் கவலைப்படவில்லை.

அதாவது செயல்படாத தலைவராகவே நான் இருந்து விட்டு போகிறேன். ஆனால் உங்களை போல் எடுபிடி முதல்வராக இருக்க மாட்டேன். மத்திய அரசுக்கு அடிமையாகி தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி பேசும் போது, தமிழகத்தில் தான் அதிக போராட்டங்கள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவ்வளவு போராட்டங்கள் நடந்துள்ளதே? என்று சிந்தித்து பார்த்துண்டா?

சேலம்- சென்னை 8 வழிச்சாலை பற்றி சட்டமன்றத்தில் நான் ஏற்கனவே பேசியுள்ளேன். அப்போது இந்த திட்டம் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.

அதாவது மக்களின் கருத்தை கேட்டு விட்டு கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும். விவசாயிகள் தற்கொலை முயற்சி சம்பவம் நடக்கிறது. இதை இந்த அரசு சிந்தித்து பார்க்க வேண்டும்.


சேலம் விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, 8 வழிச்சாலை திட்டத்துக்கு விவசாயிகள், பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறினார். தைரியம் இருந்தால் அவர் பாதிக்கப்பட்ட இடத்தில் போய் இதுபோல் பேசவேண்டும்.

சேது சமுத்திர திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. இது ராமர் பாலம் வழியாக வந்து விடும் என்பதால் நிறுத்தப்பட்டது. நீதிமன்றத்தில் ராமர் பாலத்தை தவிர்த்து செயல்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. நாங்களும் ராமர் சமுத்திர திட்டம் என்ற பெயரை வைக்கலாம் என்று தெரிவித்தோம்.

இதேபோல் 8 வழிச்சாலைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் நிபுணர் குழு அமைத்து மாற்றுப்பாதையை அமைக்கவேண்டும்.

டி.ஆர்.பாலு தரைவழி போக்குவரத்து மந்திரியாக இருந்த போது லஞ்சம் வாங்கியதாக முதல்வர் எடப்பாடி குற்றம் சாட்டியுள்ளார். தைரியம் இருந்தால் அவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடரட்டும். இதை வரவேற்கிறோம்.

ஜெயலலிதா இறந்த பிறகு நீங்கள் எவ்வளவு ஊழல், லஞ்சம் வாங்கினீர்கள் என்பதை விஜிலென்சிடம் புகார் தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin #ChennaiSalemGreenExpressWay
Tags:    

Similar News