செய்திகள்

திருவெறும்பூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை

Published On 2018-06-27 17:53 GMT   |   Update On 2018-06-27 17:53 GMT
திருவெறும்பூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவெறும்பூர்:

திருவெறும்பூர் அருகே தொண்டமான்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. திருவெறும்பூர், காட்டூர் பகுதிகளில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள் கோர்ட்டு உத்தரவின்பேரில் மூடப்பட்டதால் அங்கு பணியாற்றிய விற்பனையாளர்கள் சிலர் இந்த கடைக்கு மாற்றப்பட்டனர். அதன்படி தொண்டமான்பட்டி கடையில் 5 பேர் விற்பனையாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு விற்பனையை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு கடையின் ஷட்டரை பூட்டி விட்டு ஊழியர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று காலை டாஸ்மாக் கடை வழியாக சென்ற கிராம மக்கள் சிலர் அதன் ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மதன் தலைமையில் போலீசார் சம்பவம் நடந்த டாஸ்மாக் கடைக்கு சென்று கடையின் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை வரவழைத்து உள்ளே சென்று பார்வையிட்டனர்.

அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட மதுபாட்டில்களில் சிலவற்றை அங்குள்ள வயல்வெளியில் வைத்து குடித்து விட்டு காலி பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு சென்றிருப்பதும், மீதி பாட்டில்களை தூக்கி சென்றதும் தெரிய வந்தது. சம்பவம் நடந்த டாஸ்மாக் கடையில் தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News