செய்திகள்

செல்போன்கள் திருடிய வழக்கில் சிறுவன் உள்பட 5 பேர் கைது

Published On 2018-06-24 16:24 GMT   |   Update On 2018-06-24 16:24 GMT
கடையின் ஓட்டை பிரித்து செல்போன்கள் திருடிய வழக்கில் சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சமயபுரம்:

சமயபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் ரெங்கபிரபு(வயது 34). இவர் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியத்தில் திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்போன் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு அவர் கடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை அவருடைய கடையின் ஓடுகள் பிரிந்து கிடப்பதாக அப்பகுதியினர் ரெங்கபிரவுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அவர் கடைக்கு சென்று பார்த்தபோது புதிய செல்போன்கள், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், சர்வீஸ் பார்ப்பதற்காக வந்த செல்போன் மற்றும் சார்ஜர்கள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ரெங்கபிரபு மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், யுவராணி மற்றும் போலீசார் மண்ணச்சநல்லூர் -சமயபுரம் சாலையில் உள்ள நங்கமங்கலம் சத்திரம் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வேகமாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி, அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள், லால்குடி அருகே உள்ள கீழவாளாடி கிழக்கு தெருவை சேர்ந்த முருகேசன் மகன் தினேஷ்(25), மணி மகன் ராஜா(21), தண்டாங்கோரை கீழத்தெருவை சேர்ந்த ராமஜெயம் மகன் கிருஷ்ணன்(20), எசனக்கோரை கீழவீதியைச் சேர்ந்த கண்ணன் மகன் தினேஷ்(21), தாளக்குடியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் என்பதும், ரெங்கபிரபுவின் செல்போன் கடையில் திருடியது அவர்கள்தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் ஓட்டி வந்த 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 
Tags:    

Similar News