செய்திகள்

ரூ.5 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட சிறுவன் மீட்பு- பள்ளியில் சேர்க்க அதிகாரிகள் முடிவு

Published On 2018-06-21 04:27 GMT   |   Update On 2018-06-21 04:27 GMT
காவேரிப்பட்டணம் அருகே ஆடு மேய்ச்சலுக்காக ரூ.5 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட சிறுவனை மீட்ட அதிகாரிகள் அவனை அரசு பள்ளியில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள குட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 38). விவசாயியான இவர் 50 ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இந்த ஆடுகளை 7 வயது சிறுவன் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றான்.இதுகுறித்து சமூக ஆர்வலர் ராஜேஷ் என்பவர் தேசிய தொழிலாளர் திட்ட இயக்குனர் பிரியாவுக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இயக்குனர் பிரியா, தொழிலாளர் உதவி ஆணையாளர் ஞானவேல், துணை ஆய்வாளர் முத்து, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் பிரசன்னகுமாரி மற்றும் வின்சென்ட் உள்ளிட்டோர் சிறுவனை மீட்டு கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

பின்னர் அந்த சிறுவனிடம் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சரவணன் விசாரணை நடத்தினார்.

அந்த சிறுவனை விவசாயி வடிவேலிடம் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்றுச் சென்ற அவனது தந்தையை பெங்களூருவில் இருந்து அழைத்து வந்து விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் சிறுவனை வேலைக்கு அமர்த்திய விவசாயி வடிவேலுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட சிறுவன் தருமபுரியில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளான். இன்று அவனை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பரிசோதனை செய்து அவனுக்கு வயது சான்றிதழ் பெற்று அதன்பிறகு அவனை பள்ளியில் சேர்க்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் சிறுவனை விலைக்கு வாங்கி ஆடு மேய்க்க பயன்படுத்திய விவசாயி வடிவேல், சிறுவனின் தந்தை ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News