செய்திகள்

ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி மனு: கீழ்கோர்ட்டை அணுகும்படி ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-06-13 09:17 GMT   |   Update On 2018-06-13 09:17 GMT
சமூக விரோதி என்று பொதுமக்களை விமர்சனம் செய்த ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய கீழ் கோர்ட்டை அணுகும்படி பத்திரிகையாளருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #rajinikanth #highcourt #sterliteprotest

சென்னை:

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100-வது நாள் பேராட்டம் கடந்த மே 22-ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டபோது, அவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில், 17 வயது சிறுமி உள்பட 13 பேர் பரிதாபமாக இறந்தனர். பலர் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி, ஆறுதல் கூற நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார்.

பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், ‘ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூகவிரோதிகள் ஊடுருவி விட்டனர். போலீசார் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதால், கலவரம் ஏற்பட்டது, அதனால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்’ என்று கூறினர்.


இதையடுத்து போராட்டம் நடத்திய பொதுமக்களை சமூகவிரோதி என்று விமர்சனம் செய்த நடிகர் ரஜினிகாந்த் மீது ஓசூர் போலீசில் சிலம்பரசன் என்பவர் புகார் செய்தார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

இதையடுத்து தன் புகார் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் சிலம்பரசன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, புகார் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஓசூர் குற்றவியல் கோர்ட்டை அணுகி மனுதாரர் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார். #rajinikanth #highcourt #sterliteprotest

Tags:    

Similar News