செய்திகள்

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஜிகே வாசன்

Published On 2018-06-13 07:45 GMT   |   Update On 2018-06-13 07:45 GMT
போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஈரோட்டில் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #TamilMaanilaCongress #GKVasan #JactoJio
ஈரோடு:

ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் இன்று மதியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற 18-ந் தேதி அகில இந்திய அளவில் லாரிகள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. 13 லட்சம் லாரிகள் ஓடாத நிலை ஏற்படுவதால் அத்தியாவசிய பொருட்களான காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனவே உடனடியாக மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 2 நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. அவர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை. போராட்டக்காரர்களை அழைத்து பேச வேண்டும்.


அவர்கள் கோரிக்கையை கேட்டு தீர்வு ஏற்படுத்தி போராட்டங்கள் நிகழாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்.

காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை நன்மை தரவில்லை. தற்போது சட்ட ரீதியாக காவிரி மேலாண்மை வாரியம் என்கிற ஒரு வடிவம் கிடைத்துள்ளது. இதற்கு உச்சநீதிமன்றம் ஒரு கோட்பாட்டை தந்துள்ளது. காவிரி நதி நீரை பயன்படுத்தும் 4 மாநிலங்களும் அந்த கோட்பாட்டை சரியாக பின்பற்ற வேண்டும். அந்த வகையில் கர்நாடக அரசு ஆணைய உறுப்பினரை இன்னும் நியமிக்கவில்லை.

மீண்டும் கர்நாடக அரசின் சட்டத்துக்கு சவால்விடும் இந்த நடவடிக்கை ஏற்புடையதல்ல. மத்திய அரசு இதை வேடிக்கை பார்க்காமல் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக அரசும் காலம் தாழ்த்தாமல் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

பசுமை வழிச்சாலை அமைப்பில் உள்ள உடனடி பாதகங்கள் என்ன? என்பதை மக்களுக்கு புரிய வைத்து மக்கள் விரும்பினால் மட்டுமே அமைக்க வேண்டும். எந்த அரசாக இருந்தாலும் மக்களுக்கு அநீதியான திட்டங்கள் திணிக்கப்பட்டால் போராட்டம் நடைபெறும். வாக்களித்த மக்களை அலட்சியப்படுத்த எந்த உரிமையும் அரசுக்கு கிடையாது.

இவ்வாறு ஜி.கே. வாசன் கூறினார். #TamilMaanilaCongress #GKVasan #JactoJio
Tags:    

Similar News