செய்திகள்

சென்னை சேப்பாக்கத்தில் அரசுஊழியர் - ஆசிரியர்கள் விடிய விடிய உண்ணாவிரதம்

Published On 2018-06-12 06:12 GMT   |   Update On 2018-06-12 06:12 GMT
பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் விடிய விடிய உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்று வருகிறது. #JactoGeoProtest

சென்னை:

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 7-வது ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை களைதல், சிறப்புகால ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் போன்றவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும் ஆகியவை முக்கிய கோரிக்கைகள் ஆகும்.

இதை வலியுறுத்தி பல கட்ட போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கடந்த மாதம் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தம்- மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தொடர்பாக ஐகோர்ட்டு தலையிட்டு ஊதிய முரண்பாடு தொடர்பாக குழு அமைத்து புதிய சமரச திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டது.

 


ஆனால் குழுவின் பரிந்துரையை இதுவரை அரசு வெளியிடவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் தலைமை செயலகத்தில் போராட்டக்குழுவினர் நேரில் ஆஜராகி தங்கள் கருத்தை தெரிவித்தனர். அப்போது 11-ந்தேதி முதல் உண்ணாவிரதம் மேற் கொள்ள இருப்பதாக கூறினார்கள்.

இதைத் தொடர்ந்து திட்டமிட்டப்படி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கினார்கள்.

ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக்குழு நிர்வாகிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், மாயவன், மீனாட்சிசுந்தரம், தாஸ், வெங்கடேசன், அன்பரசு, முத்துசாமி, சுரேஷ், தாமோதரன், தியாகராஜன், மோசஸ் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் விடிய விடிய நடந்தது.

இரவு முழுவதும் உண்ணா பந்தலிலேயே படுத்து உறங்கினார்கள். ஒருசில பெண் நிர்வாகிகளும், உண்ணாவிரத மேடையில் தூங்கினார்கள். தண்ணீரை மட்டுமே அவர்கள் பருகி வருகிறார்கள்.

இன்று காலை 2-வது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் நீடித்தது.

இதில் பங்கேற்ற அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் இன்று சோர்வடைந்தனர். ஆனாலும் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று உறுதியாக உள்ளனர். 50 பெண்கள் உள்பட 250 நிர்வாகிகள் உண்ணா விரதம் இருக்கிறார்கள்.

 


உண்ணாவிரதம் இருந்து வரும் அரசு ஊழியர்களை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், ஒருங்கிணைப்பாளர்களிடம், “உடலை வருத்தி ஏன் உண்ணாவிரதம் இருக்கிறீர்கள்? இந்த அரசு எதையும் செய்யாது. அதனால் போராட்டத்தை கைவிடுங்கள். விரைவில் மலரும் தி.மு.க. ஆட்சியில் உங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

இன்று சட்டசபையில் இதுபற்றி குரல் கொடுப்பேன் என்றும் அரசு ஊழியர்களிடம் உறுதி அளித்தார். #JactoGeoProtest

Tags:    

Similar News