செய்திகள்

டீக்கடை தீப்பிடித்து எரிந்தது ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்

Published On 2018-06-07 21:29 IST   |   Update On 2018-06-07 21:29:00 IST
பள்ளிபாளையத்தில் டீக்கடை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன.
பள்ளிபாளையம்:

பள்ளிபாளையத்தில் பாலம் ரோட்டில் ஸ்ரீபுற்றுமாரியம்மன் கோவில் அருகில் மணி என்பவர் டீக்கடை வைத்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு டீக்கடையை மூடி விட்டு அவர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் இரவு 9 மணியளவில் அவரது டீக்கடை திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து டீக்கடை உரிமையாளர் மணியிடம் தெரிவித்தனர். இதை அறிந்து அவர் பதற்றத்தோடு சம்பவ இடத்துக்கு ஓடி வந்தார். அங்கே டீக்கடை தீயில் எரிந்து கொண்டு இருந்தது. டீக்கடையை ஒட்டி இருந்த பெட்டிக்கடையும் தீயில் எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் மணி மற்றும் அக்கம், பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் டீக்கடை எரிந்தது. அதில் இருந்த தின்பண்டங்கள், அலமாரி, மினிவிசிறி மற்றும் கடை அருகே இருந்த இரும்பு கடையின் முன்கூரையும் தீப்பிடித்து எரிந்தது. இதன் சேத மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு படை வீரர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News