செய்திகள்

திருச்சி அருகே 70அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் மரணம்

Published On 2018-06-06 07:05 GMT   |   Update On 2018-06-06 07:05 GMT
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள 70 அடி ஆழ கிணற்றில் வாலிபர் ஒருவர் தவறி விழுந்து பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறை:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள செட்டியப்பட்டியில் 70 அடி ஆழ கிணற்றில் ஒரு வாலிபர் தவறி விழுந்து விட்டதாக மணப்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கிணற்றுக்குள் விழுந்த வாலிபரை மீட்டு, சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அந்த வாலிபர் இறந்தார்.

அந்த வாலிபரின் பெயர், ஊர் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரை சேர்ந்த பஷிர்(வயது 35) என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது பஷிர் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து திண்டுக்கல் செல்ல ரெயில் டிக்கெட் எடுத்து விட்டு இடையில் செட்டியப்பட்டியில் இறங்கியுள்ளார். பின்னர் அந்த வழியாக வந்த நபரிடம் தன்னை ஒரு இடத்தில் இறக்கி விடும்படி கூறியுள்ளார். இதனிடையே சந்தேகமடைந்த அந்த நபர், செல்போனை எடுத்து பேச முயன்ற போது, தன்னை பற்றித்தான் யாரிடமோ பேச போகிறார் என்று எண்ணி அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள 70 அடி ஆழ தரை மட்ட கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.

பஷிர் சென்னையில் வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு நெல்லையில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு பயணித்துள்ளார். இடையில் அவர் மணப்பாறையில் இறங்கியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News