செய்திகள்

திடீர் மின் தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2018-06-02 16:39 GMT   |   Update On 2018-06-02 16:39 GMT
கந்தர்வக்கோட்டையில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் மின் நிறுத்தத்தால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கந்தர்வக்கோட்டை:

தமிழகத்தில் தற்போது வெயில் கடுமையாக உள்ளது. இதனால் இரவில் வெப்பம் அதிகரித்து மக்கள் தூங்க முடியாமல் அவதி அடைந்து வருகிறார்கள். இதனால் மின்விசிறி, ஏ.சியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் கந்தர்வக்கோட்டை பகுதியில் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் திடீரென மின் தடை ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் மின்சாரம் வந்து விடும் என பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால் மின்சாரம் வரவில்லை. இதனால் அவதி அடைந்த பொதுமக்கள் இது குறித்து தகவல்அறிய மின்சார வாரிய அலுவலகத்திற்கு போன் செய்தனர்.

ஆனால் போனை யாரும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று இரவு சுமார் 1.30 மணியளவில் தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் கந்தர்வக்கோட்டை பஸ் நிலையம் அருகே திடீர் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கபட்டது. தஞ்சை செல்லும் வாகனங்களும், புதுக்கோட்டை செல்லும் வாகனங்களும் நீண்டவரிசையில் காத்திருந்தன. 

இது குறித்துதகவல் அறிந்ததும் கந்தர்வக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். பொதுமக்கள் உடனடியாக மின்சாரம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று கூறினர். இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் போனில் பேசினார். அப்போது அவர்கள் புதுக்கோட்டை சிப்காட்டில் டிரான்ஸ்பார்மர் பழுதாகி விட்டது. ஊழியர்கள் சரி செய்து கொண்டு இருக்கிறார்கள். உடனடியாக மின்சாரம் வழங்கப்படும் என்று கூறினர். 

இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். நள்ளிரவு 1.30 மணிக்கும் ஆரம்பித்த சாலை மறியல் போராட்டம்  3.30 மணிக்கு முடிவுக்கு வந்தது. இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று அதிகாலை 5 மணிக்கு தான் மின்சாரம் வந்தது. இந்த திடீர் மின் தடையால் குழந்தைகள், முதியவர்கள், பொது மக்கள் அவதிபட்டனர்.

கந்தர்வக்கோட்டையில் நள்ளிரவில் நடந்த இந்த திடீர்சாலை மறியல் போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News