செய்திகள்

துப்பாக்கி சூடு சம்பவம் - யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க பிரதமர் உத்தரவு - மத்திய மந்திரி

Published On 2018-06-02 05:21 GMT   |   Update On 2018-06-02 05:21 GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். #ThoothukudiShooting

கோவை:

மத்திய அரசின் 4 ஆண்டு கால சாதனை விளக்க கருத்தரங்கு கோவையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

இதில் மத்திய தகவல் ஒலிபரப்பு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரி ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் பங்கேற்று பேசினார்.

புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற நோக்கத்துடன் மத்திய பாரதிய ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது.

48 ஆண்டில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகளை மத்திய மோடி அரசு வெறும் 48 மாதத்தில் செய்து முடித்துள்ளது. உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் ஏழை மக்களின் அரசாங்கமாக மத்திய மோடி அரசு செயல்படுகிறது.

இந்தியாவில் 31 கோடி மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டு சேமிப்பு பழக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு, கழிப்பிட வசதி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மத்திய அரசு வளர்ச்சி கண்டுள்ளது. இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்திய அளவில் கல்வி, வளர்ச்சி, பெண்கள் மேம்பாடு, மருத்துவம், தொலை தொடர்பு, தொழில் நுட்பம், வேலை வாய்ப்பு, விளையாட்டு உள்ளிட்ட எல்லா துறைகளிலும் நாடு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. போக்கு வரத்து துறையிலும் நல்ல வளர்ச்சி கண்டுள்ளோம்.

பொருளாதார மேம்பாடு நல்ல முன்னேற்ற பாதையில் செல்கிறது. பணமில்லா வங்கி பரிவர்த்தனை, கருப்பு பணம் ஒழிப்பு போன்றவற்றில் உலகளவில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது.

தொழில் துறையில் கடந்த 25 ஆண்டு காலம் இல்லாத வகையில் தற்போது நல்ல வளர்ச்சி கண்டுள்ளோம். இது வரவேற்கதக்கது. உலக அளவில் வளர்ச்சியின் உந்து சக்தியாக இந்தியா செயல்படுகிறது.


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இது பற்றிய அனைத்து தகவல்களும் பிரதமர் மோடிக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவர் நடந்த சம்பவம் முழுவதையும் கேட்டறிந்து வேதனை அடைந்தார்.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றிய பின்னரும் இடைத் தேர்தல்களில் பாரதிய ஜனதா தோல்வி அடைந்ததை கருத்தில் கொள்ளாமல் மக்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதையும் மேம்படுத்தும் வகையில் தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

ஆண்டு தோறும் தேசிய அளவில் ஆயிரம் பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 5 லட்சம் செலவு செய்து அவர்களை ஒலிம்பிக் போட்டிக்கு செல்வதேற்கேற்ற வகையில் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்ட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiShooting

Tags:    

Similar News