செய்திகள்

போராடுபவர்களை சமூக விரோதிகள் என்று பேசுவது வெட்கக்கேடு- ரஜினிகாந்துக்கு, சீமான் கண்டனம்

Published On 2018-06-01 07:09 IST   |   Update On 2018-06-01 07:09:00 IST
தன்னலம் இல்லாமல் மக்களுக்காக போராடுபவர்களை சமூக விரோதிகள் என்று பேசுவது வெட்கக்கேடு என்று ரஜினிகாந்துக்கு, சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். #Rajinikanth #Seeman #ThoothukudiIncident
சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மருத்துவமனையில் ரசிகர்களை கொண்டு ரஜினிகாந்த் நடத்தியது படப்பிடிப்பா? அல்லது பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் நிகழ்வா? துணை முதல்-அமைச்சரை கூடச் சந்திக்க விரும்பாத பாதிக்கப்பட்டவர்கள், அவருடன் எப்படிச் சிரித்துக்கொண்டு புகைப்படம் எடுப்பார்கள்?

இவ்வளவு பாதிப்பிற்கும் சமூக விரோதிகள் தான் காரணம் என்கிறார். சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் எத்தனை பேர் சமூகவிரோதிகள்? மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களில் எத்தனை பேர் சமூகவிரோதிகள்? என்று எல்லாம் தெரிந்த ரஜினிகாந்த் அடையாளம் காட்டுவாரா?

போராடும் மக்களை சமூகவிரோதிகள், விஷமிகள் என்று பேசுவது மிகவும் மோசமானது; நஞ்சானது. இவ்வாறு பேசுபவர்கள் தான் விஷமிகள். கலவரத்தை தூண்ட வந்தவர்கள் குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு வருவார்களா?

தொழில்வளர்ச்சி குறித்து பேசும் ரஜினிகாந்த், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகில் இருக்கும் வீடுகளில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு அதன் நிறம், சுவை எப்படியிருக்கிறது எனக் கூறமுடியுமா? அதற்கான காரணத்தை விளக்க முடியுமா?

போராடும் மக்களைப் பொதுவாக சமூகவிரோதிகள் என்று கூறுவது அயோக்கியத்தனம். போராடுவது ஒன்றும் பொழுதுபோக்கோ, நேர்த்திக்கடனோ அல்ல; போராடினால்தான் வாழமுடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஆலை நிர்வாகம் நீதிமன்றம் போனால் அவர்கள் மனுசனே இல்லை என்று, அவ்வளவு கொடிய ஆலையை மூட இதுவரை அவர் பேசியது என்ன? முன்னெடுத்த போராட்டங்கள் எத்தனை?

போராடுபவர்களுக்கு துணை நிற்க முடியாவிட்டால் ஒதுங்கி நில்லுங்கள். போராடுபவர்களை சமூக விரோதிகள் என்று கட்டமைப்பது மிகத்தவறு. பிரச்சினைகளை மக்கள் மீது திணிக்கிற அதிகாரத்தை எதிர்த்து கேள்வியெழுப்ப துணிவில்லாதவர்கள், தன்னலமற்று மக்களுக்காகப் போராடுகிறவர்களை சமூக விரோதிகள், பயங்கரவாதிகள், விஷமிகள் என்று பேசுவது வெட்கக்கேடு ஆகும். இது கண்டிக்கத்தக்கது. தூத்துக்குடிக்குள் மராட்டியனை அனுமதிக்கும் தமிழக அரசு மானத்தமிழர்களுக்குத் தடை விதிக்கிறது.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார். #Rajinikanth #Seeman #ThoothukudiIncident
Tags:    

Similar News