செய்திகள்

தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

Published On 2018-05-28 21:11 GMT   |   Update On 2018-05-28 21:11 GMT
தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை:

தமிழ் மாநில தேசிய லீக் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அக்கட்சியின் தலைவர் திருப்பூர் அல்தாப் தலைமையில் சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

நாளை(இன்று) சட்டமன்றம் கூட இருக்கிறது. சட்டமன்றத்தில் என்னென்ன பிரச்சினைகள் எல்லாம் நாளை வெடிக்க இருக்கிறது என்பது பற்றியும், எதிர்க்கட்சி என்றமுறையில் என்னவிதமான உணர்வுகளை அங்கு வெளிப்படுத்தி, கேள்விகளை எழுப்பவிருக்கிறோம் என்பதையும் நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

கடந்த ஒரு வார காலத்தில் தமிழகத்தில் நடந்துள்ள அக்கிரமங்கள், அநியாயங்கள், தூத்துக்குடியில் 13 பேர் துப்பாக்கி சூட்டுக்கு பலியான கோர சம்பவம், அதற்கெல்லாம் காரணமானவர்கள் யார்? அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதா? துப்பாக்கிசூடு நடத்தும் ஆணையை வழங்கியது யார்? அந்த உத்திரவு எங்கிருந்து வந்திருக்கிறது? என்பதெல்லாம் இன்றைக்கு கேள்விக்குறியாக இருந்தாலும், இதற்கெல்லாம் முழு காரணமாக இருந்தவர்கள், ஆட்சியில் இருப்பவர்கள் தான் என்பது நாடறிந்த உண்மை. அதில் எந்தவித மாற்றமும் கிடையாது.

தமிழ்நாட்டில் 13 பேர் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி இருக்கின்றனர், ஆனால், ஒரு அனுதாப செய்தியாவது இதுவரை பிரதமரிடம் இருந்து வந்திருக்கிறதா என்றால் இல்லை. ஒருவேளை, குஜராத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், பிரதமர் மோடி வாய் திறக்காமல் இருந்திருப்பாரா?

ஆனால், நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்காவிட்டாலும், படுகொலைக்கு ஆளானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லும் நிலையில் கூட இன்றைக்கு பிரதமர் இல்லை என்பதை எண்ணி பார்க்கின்றபோது, எப்படிப்பட்ட பிரதமரை நாம் பெற்றிருக்கிறோம் என்று வேதனைப்படுவதை தவிர வேறு வழியில்லை.

இதற்கெல்லாம் முடிவுகட்டக்கூடிய வகையில், ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நாம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் ஏற்படுத்த தயாராக வேண்டும் என்பதற்கான உறுதியை எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சியை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News