செய்திகள்
சமயபுரம் கோவிலில் பரிகார பூஜை நடைபெற்ற போது எடுத்தப்படம்.

பரிகார பூஜைக்கு பிறகு சமயபுரம் கோவில் நடை திறப்பு- பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

Published On 2018-05-26 10:40 IST   |   Update On 2018-05-26 10:40:00 IST
திருச்சி சமயபுரம் கோவிலில் யானை மிதித்து பாகன் பலியானதை தொடர்ந்து கோவிலில் இன்று 8 இடங்களில் பரிகார பூஜை செய்யப்பட்டு நடை திறக்கப்பட்டது. #SamayapuramMariammanTemple
திருச்சி:

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று காலை 9 மணிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது கோவிலுக்குள் நின்று கொண்டிருந்த கோவில் யானை மசினி திடீரென ஆத்திரம் அடைந்து ஆசி வாங்க வந்த பக்தர்களை தள்ளி விட்டதுடன் ஆவேசமாக பிளிறியது.

அப்போது அங்குசத்தால் குத்தி கட்டுப்படுத்த முயன்ற பாகன் கஜேந்திரனை (வயது 47) யானை மசினி துதிக்கையால் காலுக்குள் தள்ளி நெஞ்சில் மிதித்து கொன்றது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சோக சம்பவம் செல்போன்கள் மூலம் உலகம் முழுவதும் பரவி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பாகனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. யானை மசினி கோவில் வளாகத்தில் இருந்து நேற்று இரவு வெளியேற்றப்பட்டு சமயபுரம் அருகில் உள்ள மாகாளிக்குடி கொட்டகைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைத்து வைக்கப்பட்டது.

சமயபுரம் கோவிலுக்குள் பாகன் யானையால் மிதித்து கொல்லப்பட்டது குறித்து பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை கோவிலில் அதிகாரிகள் அர்ச்சகர்கள் மூலம் பரிகார பூஜை நடத்தினர்.

சமயபுரம் கோவிலின் முக்கிய வாசல், மற்றும் வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய 4 வாசல்களிலும் கோலம் போடப்பட்டு, தேங்காய், அரிசி, பழங்கள், பூக்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. பிறகு பூசணியில் சூடம் ஏற்றி உடைக்கப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டது.

காலை 7 மணி முதல் இந்த பூஜைகள் நடைபெற்றன. வாசல்கள் தவிர கோவிலின் 4 முக்கு பகுதிகளிலும் இதே போன்று பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. கோவிலுக்குள்ளும் பூஜைகள் நடந்தது.

சமயபுரம் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் வரிசையில் நிற்பதை படத்தில் காணலாம்.

அதன் பிறகு 10 மணிக்கு மேல் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதுவரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவில் வெளியே காத்திருந்தனர்.

கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்ததும் மாகாளிக்குடி சென்று அங்கு கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த யானை மசினியையும் பார்க்க சென்றனர். ஆனால் பாதுகாப்பு கருதி யானை அருகில் செல்ல பக்தர்கள் அனுமதிக்கவில்லை.

இதற்கிடையே யானை மசினிக்கு திடீரென ஆத்திரம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் கூறப்படுவதால் கோவில் வளாகத்தில் உள்ள கேமிராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை அதிகாரிகள் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் கோவில் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  #SamayapuramMariammanTemple
Tags:    

Similar News