search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elephant angry"

    திருச்சி சமயபுரம் கோவிலில் யானை மசினி மிதித்ததில் பாகன் உயிரிழந்த சம்பவத்தால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஸ்ரீரங்கம் ஜீயர் தெரிவித்தார்.
    திருச்சி:

    திருச்சி சமயபுரம் கோவிலில் யானை மசினி மிதித்ததில் பாகன் கஜேந்திரன் உயிரிழந்தார். இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் யானை மசினிக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்ரீரங்கம் கோவில் கருவறையில் நேற்று முன்தினம் மர்மநபர் ஒருவர் பை ஒன்றை வீசினார். இதனால்தான் பெருமாளின் தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு கோபம் ஏற்பட்டு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #SamayapuramMariammanTemple #ElephantMahout  #ElephantMasini
    கோவில் யானைகளை பராமரிப்பதற்காக வாழ்க்கையை அர்ப்பணித்த பாகன் கஜேந்திரனின் குடும்பம், தற்போது யானையால் நிர்கதியாகியிருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருச்சி:

    திருச்சி சமயபுரம் கோவில் யானை மசினி மிதித்ததில் பாகன் கஜேந்திரன் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில் பாகன் கஜேந்திரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டதை அடுத்து கஜேந்திரனின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக நடைபெற்ற இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பக்தர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இறுதி சடங்கு நிகழ்ச்சியின் போது கஜேந்திரனின் தந்தை கோபால் கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் பரம்பரை பரம்பரையாக கோவில் யானைகளை பராமரித்து வருகிறோம். எனது தந்தையும் யானை பாகன் தான். எனக்கு 3 மகன்கள். ஒரு மகன் ஷேசாஸ்த்திரி. திருவண்ணாமலை கோவில் யானையான ருக்குவுக்கு பாகனாக பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் தாமோதரன். சேலம் ஆயிரத்து எட்டு சிவன் கோவில் யானைக்கு பாகனாக பணியாற்றி வருகிறார். கஜேந்திரன் சமயபுரம் கோவில் யானை பாகனாக பணியாற்றி வந்தான். இந்தநிலையில் அவன் வளர்த்து வந்த யானை மிதித்து கொன்றது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எங்கள் குடும்பத்திற்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அனைத்து உதவிகளும் செய்வதாக கூறி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இறந்து போன கஜேந்திரனுக்கு 2 மனைவிகள். முதல் மனைவி மாலினி. அவர் இறந்து விட்டதால் 2-வதாக தேவிபாலாவை திருமணம் செய்துள்ளார். 2 மனைவிகள் மூலம் கஜேந்திரனுக்கு அச்சுதானந்தம், லட்சுமி பிரியா, விட்டல் கிருஷ்ணன், சுதாகரன் ஆகிய 4 குழந்தைகள் உள்ளனர். 
    திருச்சி சமயபுரம் கோவிலில் 10 வருடங்களாக பராமரித்த பாகன் கஜேந்திரனை காலால் மிதித்து நசுக்கி கொன்ற கோவில் யானை மசினி இரவில் அவரை காணாமல் கண்களில் வழிந்த கண்ணீருடன் நின்றது பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
    திருச்சி:

    சமயபுரம் மாகாளிக்குடி அக்ரஹாரத்தைச் சேர்ந்த கஜேந்திரன், யானை மசினியை 10 வருடங்களாக குளிப்பாட்டி அலங்காரம் செய்து மகளை போல பராமரித்து வந்தார். இதற்கு உதவியாக அவரது மகன் அச்சுதனும் இருந்து வந்தார்.

    கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த மசினி யானை சமீபத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடந்த பூச்சொரிதல் விழாவில் பூக்கூடையை பாகன் கஜேந்திரனுடன் சுமந்து வந்தது மாரியம்மன் கோவில் பக்தர்கள் கண்ணில் இன்றும் நிழலாடுகிறது.

    அங்குள்ள தனியார் யானைகள் விஜயா, ஜெயா ஆகியவற்றுடன் யானை மசினி காவிரி ஆற்றுக்கு சென்று குளித்து விட்டு வரும். தோழிகளுடன் மசினி நடந்து வருவதை பக்தர்கள் கண்டு பரவசம் அடைவார்கள்.

    2008-ம் ஆண்டு மசினி யானை குட்டியாக இருந்த போது முதுமலை கார்குடி பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அதை மீட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏற்கனவே இருந்த மாரியப்பன் என்ற கோவில் யானைக்கு பதிலாக மசினி யானை அனுப்பி வைக்கப்பட்டது.

    2008-ம் ஆண்டு முதல் மசினி யானையை கோவில் ஊழியர்கள் ரவிக்குமார், ராமமூர்த்தி ஆகியோர் பராமரித்து வந்தனர். 2016 பிப்ரவரி மாதம் மசினி யானை திடீரென ஊழியர் ரவிக்குமாரை தும்பிக்கையால் தூக்கி வீசியது.

    அப்போது நடந்த சம்பவத்தில் ரவிக்குமாருக்கு இரு விலா எலும்புகளும் உடைந்தன. எதனால் மசினி ஆத்திரம் அடைந்தது என விசாரித்த போது யானை கட்டப்பட்டிருந்த இடத்தில் அதிக அளவில் பறவைகள் எழுப்பிய சத்தத்தால் திடீரென ஆவேசம் அடைந்து பிளிறிய போது ரவிக்குமார் அதை தடவிக் கொடுத்து சமாதானம் செய்த போது தான் ஆத்திரத்தில் தூக்கி வீசியது தெரிய வந்தது.

    இப்போதும் நேற்று 2 ஆண்டுகளுக்கு பிறகு பாகன் கஜேந்திரனை முதலில் ஆத்திரத்தில் தள்ளி விட்டது. அவர் மீண்டும் எழுந்து வந்து அங்குசத்தால் அதன் காலில் குத்திய போது தான் அவரை துதிக்கையால் காலுக்குள் இழுத்து நெஞ்சில் காலால் மிதித்துள்ளது.

    இப்போது மசினி ஆத்திரம் அடைந்ததற்கும் அதிக படியான சத்தம் அதற்கு காரணமாக இருக்கலாம். அல்லது யாராவது அதை எரிச்சல் அடைய செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    நேற்று பகல் 9 மணிக்கு பாகன் கஜேந்திரனை காலால் மிதித்து கொன்ற மசினி யானை 2 மணி நேரத்திற்கும் மேலாக அவரை காலுக்குள்ளேயே அங்கும் இங்கும் தள்ளி விட்டும் துதிக்கையால் தூக்கி போட்டும் தனது சிறிய தந்தத்தால் குத்தியும் ஆத்திரத்தை தணித்தது.

    அதன் பிறகு 20-க்கும் மேற்பட்ட பாகன்கள் மசினி யானையுடன் குளிக்க உடன் செல்லும் விஜயா, ஜெயா தோழி யானைகள் உதவியுடன் வன அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள், கோயில் ஊழியர்கள் மசினி யானையை அமைதி நிலைக்கு கொண்டு வந்தனர்.

    சகஜ நிலைக்கு திரும்பிய மசினி யானை தனது பாகனை கொன்றது தெரியாமல் அவரை அங்கும், இங்கும் தேடியது. கஜேந்திரனை காணாததால் அதன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்ததாக அருகில் இருந்தவர்கள் கூறினார்கள்.

    ஒரு வழியாக இரவு 9.30 மணிக்கு தோழி ஜெயா யானை கோவிலுக்கு சென்று மசினியை வெளியே அழைத்து வர மற்றொரு தோழி விஜயாவும் அவர்களோடு சேர்ந்து கொண்டு மசினியை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தன.

    அதன் பிறகு அங்குள்ள மாகாளிக்குடி கொட்டகையில் மசினி யானை இரவு 9 மணிக்கு அடைக்கப்பட்டது. இரவிலும் அதன் நடவடிக்கையை கோவில் ஊழியர்கள் கண்காணித்தனர். நேற்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 12 மணி நேரம் மசினி யானை ஏற்படுத்திய பரபரப்பும், சோகமும் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இன்று சமயபுரம் கோவிலில் சகஜ நிலை திரும்பியது. காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்தனர். கோவிலுக்குள் சில பூஜைகள் செய்யப்பட்ட பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட் டனர்.

    மாகாளிக்குடி கொட்டகையில் மசினி யானை விடிய விடிய கண்களில் வழிந்த கண்ணீருடன் கஜேந்திரன் வருவாரா? என காத்திருந்தது. இதை பார்த்த கோவில் ஊழியர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.  #SamayapuramMariammanTemple #ElephantMahout  #ElephantMasini
    திருச்சி சமயபுரம் கோவிலில் யானை மிதித்து பாகன் பலியானதை தொடர்ந்து கோவிலில் இன்று 8 இடங்களில் பரிகார பூஜை செய்யப்பட்டு நடை திறக்கப்பட்டது. #SamayapuramMariammanTemple
    திருச்சி:

    திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று காலை 9 மணிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது கோவிலுக்குள் நின்று கொண்டிருந்த கோவில் யானை மசினி திடீரென ஆத்திரம் அடைந்து ஆசி வாங்க வந்த பக்தர்களை தள்ளி விட்டதுடன் ஆவேசமாக பிளிறியது.

    அப்போது அங்குசத்தால் குத்தி கட்டுப்படுத்த முயன்ற பாகன் கஜேந்திரனை (வயது 47) யானை மசினி துதிக்கையால் காலுக்குள் தள்ளி நெஞ்சில் மிதித்து கொன்றது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சோக சம்பவம் செல்போன்கள் மூலம் உலகம் முழுவதும் பரவி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    பாகனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. யானை மசினி கோவில் வளாகத்தில் இருந்து நேற்று இரவு வெளியேற்றப்பட்டு சமயபுரம் அருகில் உள்ள மாகாளிக்குடி கொட்டகைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைத்து வைக்கப்பட்டது.

    சமயபுரம் கோவிலுக்குள் பாகன் யானையால் மிதித்து கொல்லப்பட்டது குறித்து பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை கோவிலில் அதிகாரிகள் அர்ச்சகர்கள் மூலம் பரிகார பூஜை நடத்தினர்.

    சமயபுரம் கோவிலின் முக்கிய வாசல், மற்றும் வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய 4 வாசல்களிலும் கோலம் போடப்பட்டு, தேங்காய், அரிசி, பழங்கள், பூக்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. பிறகு பூசணியில் சூடம் ஏற்றி உடைக்கப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டது.

    காலை 7 மணி முதல் இந்த பூஜைகள் நடைபெற்றன. வாசல்கள் தவிர கோவிலின் 4 முக்கு பகுதிகளிலும் இதே போன்று பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. கோவிலுக்குள்ளும் பூஜைகள் நடந்தது.

    சமயபுரம் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் வரிசையில் நிற்பதை படத்தில் காணலாம்.

    அதன் பிறகு 10 மணிக்கு மேல் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதுவரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவில் வெளியே காத்திருந்தனர்.

    கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்ததும் மாகாளிக்குடி சென்று அங்கு கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த யானை மசினியையும் பார்க்க சென்றனர். ஆனால் பாதுகாப்பு கருதி யானை அருகில் செல்ல பக்தர்கள் அனுமதிக்கவில்லை.

    இதற்கிடையே யானை மசினிக்கு திடீரென ஆத்திரம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் கூறப்படுவதால் கோவில் வளாகத்தில் உள்ள கேமிராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை அதிகாரிகள் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் கோவில் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  #SamayapuramMariammanTemple
    ×