செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - கும்பகோணத்தில் நள்ளிரவில் 3 அரசு பஸ்கள் உடைப்பு

Published On 2018-05-24 10:31 GMT   |   Update On 2018-05-24 10:31 GMT
கும்பகோணத்தில் நள்ளிரவில் 3 அரசு பஸ்கள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கும்பகோணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம்:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியானார்கள்.

துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் போராட்டம் பெரிய அளவில் வெடித்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருந்த போதிலும் போராட்டக் காரர்கள் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக ஒரு அரசு விரைவு பஸ் சென்னைக்கு சென்றது. அப்போது அந்த பஸ் கும்பகோணம் அடுத்துள்ள சுந்தர பெருமாள் கோவில் பகுதியில் நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்த போது அங்கு மறைந்து இருந்த மர்ம நபர்கள் சிலர் பஸ்சின் கண்ணாடி மீது கற்களை வீசி தாக்கினர்.

இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சேதமானது. உடனே பஸ் டிரைவர் இது குறித்து கும்பகோணம் போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டு பஸ்சை அங்கிருந்து எடுத்து சென்றார். இந்த சம்பவத்தால் கும்பகோணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது போன்று பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை பகுதியில் அரசு விரைவு பஸ் ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் அந்த பஸ்சின் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் பஸ்சின் இடதுபுறம் உள்ள கண்ணாடிகள் உடைந்தது.

இதைத் தொடர்ந்து நாச்சியார் கோவில் அருகே உள்ள நரசிங்கபேட்டை பகுதியில் சென்ற அரசுபஸ் மீதும் மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவு கற்களை வீசியுள்ளனர். இதில் அந்த பஸ்சின் கண்ணாடியும் சேதமானது.

கும்பகோணம் பகுதியில் நேற்று நள்ளிரவு மட்டுமே 3 அரசு பஸ்கள் மீது தாக்குதல் நடந்திருப்பது தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அந்தந்த சரகத்திற்குட்பட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பஸ்கள் மீது தாக்குதல் நடந்த இடத்தில் வைக்கப் பட்டிருக்கம் சி.சி.டி.வி. பதிவுகளை வைத்து போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 3 இடங்களிலும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் தான் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News