செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட் கிளையில் மனு

Published On 2018-05-23 13:46 GMT   |   Update On 2018-05-23 13:46 GMT
தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியான நிலையில், இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #SterliteProtest
மதுரை:

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 11 பேர் கொல்லப்பட்டனர். இன்று அண்ணாநகர் பகுதியில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இதில், ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கே.கே மகேஷ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். 

ஏற்கனவே, துப்பாக்கிச்சூட்டில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என சென்னை ஐகோர்ட்டில் 3 வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில், பலியானவர்களில் உடல்களை பிரேத பரிசோதனைக்கு பின்னர் பதப்படுத்தி வைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News