செய்திகள்

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தனியார் நிறுவனம் கைவிட்டது

Published On 2018-05-10 05:17 GMT   |   Update On 2018-05-10 05:17 GMT
தொடர் போராட்டம் மற்றும் அனுமதி வழங்குவதில் தாமதம் ஆகியவற்றால் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டதாக தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. #HydrocarbonProject
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்க முடிவு செய்த மத்திய அரசு அதற்கான அனுமதியை ஜெம் என்ற தனியார் நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி வழங்கியது.

இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நெடுவாசல் நாடியம்மன் கோவில் திடலில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழு என்ற அமைப்பினை தொடங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 22 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தின் போது மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் திட்டம் நிறைவேற்றப்படாது என உறுதியளித்ததை தொடர்ந்து இரண்டு கட்டங்களாக நடந்த 175 நாள் போராட்டத்தை தற்காலிகமாக பொதுமக்கள் கைவிட்டனர்.

இந்த திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் எப்போது வேண்டுமானாலும் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம் என கூறியிருந்தனர்.

இந்தநிலையில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுவதாக ஜெம் நிறுவனம் அறிவித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்று 180 நாட்களுக்குள் அதனை தொடங்கவேண்டும் என்று சட்டவிதிகள் உள்ளது.

ஆனால் தற்போது வரை அந்த திட்டம் தொடங்கப்படாமலேயே இருக்கிறது. நெடுவாசல் உள்ளிட்ட கிராம மக்களின் தொடர் போராட்டங்கள் திட்டம் தொடங்க காலதாமதம் ஆவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.


எனவே ஜெம் நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்குவதற்கு தங்களுக்கு நெடுவாசலை தவிர்த்து வேறு இடம் வழங்க வேண்டும் என்று மத்திய எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியது. அதற்கு பதில் கூற தொடர்ந்து அந்த அமைச்சகம் காலதாமதம் செய்ததும் காரணமாக கூறப்படுகிறது.

மேலும் தமிழக அரசும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு வழங்கிய குத்தகையை தங்களுக்கு மாற்றித்தர இழுத்தடிப்பு செய்து வருவதால் தங்கள் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருப்பதால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நெடுவாசல் கிராமத்தில் கைவிட முடிவு செய்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நெடுவாசல் போராட்டக்குழு உறுப்பினரும், தமிழர் நலன் பேரியக்க பொதுச்செயலாளருமான பழ.திருமுருகன் கூறியதாவது:-

நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக அனுமதியை ஜெம் நிறுவனத்திற்கு வழங்கிய மத்திய அரசு, 180 நாட்கள் ஆகியும் திட்டத்தை தொடங்காததால் அனுமதியை ஏற்கனவே ரத்து செய்து விட்டது. அதன்பிறகு அதே மத்திய அரசு சர்வதேச அனுமதியை வழங்கியுள்ளது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் திட்டத்தை தொடங்கலாம். எனவே ஜெம் நிறுவனம் திட்டத்தை கைவிட்டதாக வெளியிட்ட அறிவிப்பை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு மக்களை ஏமாற்ற நாடகம் ஆடுகிறது.

மத்திய அரசின் எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ததாக அறிவிக்க வேண்டும். நாளை மறுநாள் (12-ந்தேதி) நெடுவாசலில் ஆலோசனை கூட் டம் நடத்தி அடுத்த கட்ட தொடர் போராட்டம் குறித்து அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். #HydrocarbonProject
Tags:    

Similar News