செய்திகள்

மத்திய அரசுக்கு எதிராக செயல்பட அ.தி.மு.க. தயங்குகிறது- திருநாவுக்கரசர்

Published On 2018-03-16 13:55 IST   |   Update On 2018-03-16 13:55:00 IST
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க தயங்குகிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமானநிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் தீர்மான கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் மாநில தலைவர்கள், மாநில சட்ட மன்ற தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறோம்.

ராகுல்காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று முதல் முறையாக 2 நாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் பெற இருக்கிறது. இதற்காக தமிழகத்தில் இருந்து முன்னாள், இன்னாள் மாநில தலைவர்கள் மாவட்ட தலைவர்கள், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கான தங்கும் ஏற்பாடு போக்குவரத்து ஏற்பாடு டெல்லியில் செய்யப்பட்டு உள்ளது.

ராகுல் தலைவராக பொறுப்பேற்று நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் காங்கிரசார் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

ஏற்கனவே நான் சொன்னபடி இது வாசமற்ற காகித பூ பட்ஜெட் இந்த பட்ஜெட்டில் மக்கள் நலனுக்கான, மக்கள் நலத்திட்டங்களுக்கான திட்டங்கள் இல்லை. இது சாதாரண பட்ஜெட்.

சட்ட சபையில் நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதை நான் வரவேற்கிறேன் பாராட்டுகிறேன். தீர்மானத்தோடு நிற்காமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு நெருக்கடி தரவேண்டும்.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கட்சியும், ஜெகன் மோகன் ரெட்டி கட்சியும் நேர் எதிர் கட்சிகள் ஆனால் மக்கள் நலன் கருதி இரு கட்சிகளும் கைகோர்த்து உள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரி ஜெகன்மோகன் ரெட்டி கட்சியின் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து உள்ளனர். இதற்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்.

இதேபோல் ஆளும் அ.தி.மு.க. அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுத்தால் காங்கிரஸ் ஆதரிக்கும். ஏற்கனவே தி.மு.க. ஆதரிப்பதாக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.



எம்.பி.க்கள், எம்.எல். ஏ.க்கள் ராஜினாமாவோ, நம்பிக்கை இல்லா தீர்மானமோ எது செய்தாலும் அதை ஆதரிப்போம். மத்திய அரசுக்கு எதிராக அ.தி.மு.க. அரசு இதனை செய்ய ஏன் தயங்குகிறது. 2 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் பெற்றே தீர வேண்டும்.



பா.ஜனதாவின் முடிவின் தொடக்கம்தான் கடைசியாக நடந்த 10 நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த தோல்வி. ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் பா.ஜனதாவுக்கு சரியான பாடம் புகட்டுகிறார்கள். ஆனால் மத்திய அரசு திருந்தவில்லை.

டி.டி.வி தினகரன் புதிய அமைப்பு தொடங்கியதற்கு வாழ்த்துக்கள். அவர் எம்.ஜி.ஆர். படத்தை பயன்படுத்தாதது ஏன் என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Similar News