செய்திகள்
சென்னையில் செயல்பட்டுவந்த மலையேற்ற பயிற்சி அலுவலகம் திடீரென மூடப்பட்டது
குரங்கணி காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் சென்னையில் செயல்பட்டுவந்த மலையேற்ற பயிற்சி அலுவலகம் திடீரென மூடப்பட்டது.#KuranganiForestFire
ஆலந்தூர்:
குரங்கணி காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்து உள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் செயல்பட்டு வந்த மலையேற்ற பயிற்சி அலுவலகம் மூலம் சென்னையில் இருந்து பெண்கள் குழுவினர் குரங்கணி சென்றுள்ளதாக தெரியவந்தது. காட்டுத் தீ விபத்து மற்றும் உயிரிழப்பு தொடர்பான தகவல் அறிந்ததும் சென்னை மலையேற்ற பயிற்சி அலுவலகம் மூடப்பட்டது. அதன் பெயர் பலகைகளும் அகற்றப்பட்டுவிட்டன.
அங்கிருந்து பீட்டரும் தப்பிச் சென்றுவிட்டார். பயிற்சி மையத்திற்கு வரும் ஊழியர்களும் பணிக்கு வரவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் பீட்டரை தொடர்ந்து தேடி வருகிறார்கள். அந்த கிளப் உரிய அனுமதியுடன் செயல்படுகிறதா? என்பதற்கான ஆவணங்களை ஆய்வு செய்ய சோழிங்கநல்லூர் தாசில்தார் ஏழுமலை தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகளும் சென்றனர். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு திரும்பிச் சென்றனர். இதுபற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சென்னை மலையேற்ற பயிற்சி அலுவகம் லாப நோக்கமற்ற தன்னார்வ குழு என மட்டும் இணையதளத்தில் தகவல் இடம் பெற்றுள்ளது.
கிளப்பின் வலைத்தள பக்கத்தில் நிர்வாகிகள் பற்றிய விவரம் எதுவும் இல்லை. அந்த கிளப் லாபநோக்கமற்ற, அதேசமயம் செலவுகளை சமமாக பகிர்ந்துகொள்ளும் வகையில் தன்னார்வு நிறுவனமாக செயல்பட்டுள்ளது. மலையேற்றம் மட்டுமின்றி விளையாட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள், தூய்மை பணிகள், சமூகப்பணிகள் போன்ற பல நடவடிக்கைகளில் வருடம் முழுவதும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும், வேலை நாட்களில் காலை நேரத்திலும் ஈடுபட்டுவந்தது. வலைத்தள பக்கத்தில் இதுதொடர்பான புகைப்படங்கள் உள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு மெல்ல மெல்ல வளர்ந்து, தற்போது தென்னிந்தியாவிலேயே குறிப்பிடத்தக்க மலையேற்ற அமைப்பாக உருவாகி உள்ளது. தொடர்ந்து அந்த மலையேற்ற அலுவலகம் பற்றி போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews #KuranganiForestFire