செய்திகள்

வேதாரண்யத்தில் தொடர் மழை: சம்பா சாகுபடி முற்றிலும் பாதிக்கும் அபாயம்

Published On 2017-11-12 18:26 IST   |   Update On 2017-11-12 18:26:00 IST
வேதாரண்யத்தில் தொடர் மழையால் சம்பா பயிர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா முழுவதும் நேற்று இரவு ஒரே நாளில் 12 செமீ மழை பெய்தது. கடந்த 9 நாளில் பெய்த மழையில் தலைஞாயிறு, கரியாப்பட்டினம், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் 60 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் மூழ்கியது. அரிச்சந்திரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வண்டல், குண்டுரான்வெளி, பழையாற்றங்கரையை முற்றிலுமாக நீர் சூழ்ந்துள்ளது. இப்பகுதியில் மக்கள் தங்கள் அன்றா தேவைகளுக்கு படகில் சென்று வந்தனர். கடந்த 9ம் தேதி மட்டும் வெயில் அடித்த நிலையில் நேற்று மாலை முதல் மழை பெய்ய துவங்கியது. விடிய விடிய பெய்த கனமழையில் வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் ஏரி, குளங்கள் நிரம்பி வழிந்தன.

புஷ்கரணி, கைலவனம்பேட்டை, காந்திநகர், கொள்ளுதீவு, ராமகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. வேதாரண்யம் காந்திநகரில் புதிதாக கட்டப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதியை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் வீடுகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கனமழை மற்றும் கடல் சீற்றத்தால் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஆயிரக்கணக்கான படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் சூழ்ந்து அழுகிக்கொண்டிருக்கும் சம்பா பயிர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவில்தாவு கடல் முகத்துவராத்தில் உள்ள சட்ரஸ் வழியாக மானங்கொண்டான் வெள்ளநீர் வேகமாக வடியத் துவங்கியுள்ளது. கொள்ளுத்தீவு, காந்திநகர், புஷ்பவனம் உள்ளிட்ட பகுதிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பார்வையிட்டார். கோவில்தாவில் உள்ள ஆற்று நீர் கடலோடு கலக்கும் சட்ரஸை பார்வையிட்டார். அங்கு கூடியிருந்த பெண்கள் தங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெருவிளக்குகள் இல்லையென்றும் கூறினர். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உறுதியளித்தார்.

Similar News