மணல்மேடு அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம்-பணம் கொள்ளை
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள மல்லிய கொல்லையில் ஒரு டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை நேற்று இரவு ஊழியர்கள் பூட்டி விட்டு சென்று விட்டனர்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு கடை பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாவில் வைக்கப்பட்டு இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் மதுபான பாட்டில்களை திருடி கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை அதே பகுதியில் செங்கல் ஆளை நடத்தி வரும் காமராஜ் என்பவர் டாஸ்மாக் கடை பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். அவர் இது பற்றி டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் ராமலிங்கத்துக்கு தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ராமலிங்கம் மற்றும் கடை ஊழியர்கள் ரெங்கநாதன், கார்த்திகேயன், வன்னியராஜன், முருகன், கண்ணன், ரமேஷ் ஆகியோர் கடைக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் மதுபாட்டில்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.
இது பற்றி மணல்மேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த கடையில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் மணல்மேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.