தேவகோட்டையில் 4 வீடுகளில் பூட்டை உடைத்து நகை கொள்ளை
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அண்ணா சாலை முதல் வீதியில் வசிப்பவர் கருப்பையா (வயது 45). கூட்டுறவு சங்க வங்கியில் வீட்டுவசதி பிரிவு தலைவராக உள்ளார்.
இவரது மகளும், மனைவியும் இன்று அதிகாலை ஊருக்கு புறப்பட்டனர். அவர்களை பஸ் ஏற்றி விடுவதற்காக கருப்பையாவும் வீட்டை பூட்டிச் சென்றார்.
சிறிது நேரத்தில் அவர் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடப்பதை பார்த்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த 2 பீரோக்களும் திறந்து கிடந்தன.
அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்பையா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பீரோவில் இருந்த மோதிரம், மூக்குத்தி, தங்கச்சங்கிலி என 12 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருப்பதாக அவர் தெரிவித்தார்.
அண்ணாசாலை 2-வது வீதியில் வசிப்பவர் ராமநாதன், ஓட்டல் நடத்தி வரும் இவர், இன்று காலை 5 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் ஓட்டலுக்குச் சென்று விட்டார்.
இதனை பயன்படுத்தி யாரோ கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். ராமநாதன் வீட்டின் மாடியில் வசிப்பவர்கள், வாசல் தெளிக்க கீழே வந்தபோது, கதவு உடைந்திருப்பதை பார்த்து ராமநாதனுக்கு தகவல் கொடுத்தனர்.
அவர் விரைந்து வந்து பார்த்து விட்டு, வீட்டில் இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலி திருட்டு போயிருப்பதாக போலீசில் தெரிவித்துள்ளார்.
அதே வீதியில் வசிக்கும் போஸ் என்ற செல்லம் என்பவர் வீட்டிலும் கொள்ளையர்கள் கதவை உடைத்து புகுந்துள்ளனர். ஆனால் இங்கு எதுவும் கொள்ளை போனதாக தெரியவில்லை.
அதே பகுதியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. சோழன் பழனிச்சாமியின் தங்கை வீட்டிலும் மர்ம நபர்கள் கதவை உடைத்து புகுந்து நகை- பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
வீட்டின் உரிமையாளர்கள் திரும்பி வந்தால் தான் கொள்ளை போன நகை மற்றும் பணம் குறித்த விவரம் தெரியவரும்.
ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அந்தப்பகுதி மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளை சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முகமது எர்ஷாத் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
திருப்பத்தூர் தாலுகா வீராமதி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 47). இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 54 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.
இது குறித்த புகாரின் பேரில் கீழச்செவல்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தேவகோட்டை தாலுகா சோமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 68). விவசாயியான இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்த போது மர்ம நபர்கள் இவரது வீட்டில் புகுந்து 11 பவுன் நகை, எல்.இ.டி. டி.வி. ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.
இது குறித்து சோமநாத புரம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சந்திரசேகர் வழக் குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
காரைக்குடி அருகே புதுவயல் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாச கோபாலன் (65). இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 6 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.
இது குறித்து சாக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கடந்த ஓராண்டில் மட்டுமே தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இந்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாதது போலீசார் மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.