செய்திகள்

மது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்

Published On 2017-09-21 17:09 IST   |   Update On 2017-09-21 17:09:00 IST
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே குடிபோதையில் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிஞ்சிப்பாடி:

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள விழப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது45). கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழ்செல்வி(32).

சண்முகத்துக்கு மது குடிக்கும்பழக்கம் இருந்தது. அவர் தினமும் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி தமிழ்செல்வியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறுஏற்பட்டது. நேற்று மாலையிலும் சண்முகம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவரை ஏன் இப்படி குடித்துவிட்டு வருகிறீர்கள் என்று தமிழ் செல்வி கண்டித்தார்.

இதனை தொடர்ந்து மனைவியிடம் சண்முகம் தகராறு செய்தார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சண்முகம், மனைவி தமிழ்செல்வியின் கழுத்தை நெரித்து கீழே தள்ளினார்.

பின்னர் அவரது கழுத்தில் காலால் மிதித்தார். இதில் சிறிது நேரத்தில் தமிழ்செல்வி பரிதாபமாக இறந்தார். மனைவி இறந்ததை அறிந்ததும் சண்முகம் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று வீட்டில் பிணமாக கிடந்த தமிழ்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறனர்.

குடிபோதையில் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News