செய்திகள்

சேத்தியாத்தோப்பில் விபத்து: அரசு பஸ் டிரைவர் உடல் நசுங்கி மரணம்

Published On 2017-09-20 10:48 GMT   |   Update On 2017-09-20 10:48 GMT
சேத்தியாத்தோப்பில் அரசு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் அரசு பஸ் டிரைவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
சேத்தியாத்தோப்பு:

வேலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று கும்பகோணம் நோக்கி நேற்று புறப்பட்டது. இந்த பஸ்சை வேலூரைச் சேர்ந்த டிரைவர் விஜயகுமார் (வயது 56) ஓட்டி வந்தார்.

நேற்று இரவு 10.30 மணிக்கு கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்குசாலை பெட்ரோல் பங்க் அருகே அந்த பஸ் வந்தது. அப்போது சேத்தியாத்தோப்பில் இருந்து வடலூரை நோக்கி வேகமாக ஒரு லாரி வந்தது. அந்த லாரியும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் அரசு பஸ்சின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. லாரியின் முன்பகுதியும் சேதமடைந்தது. விபத்தில் அரசு பஸ் டிரைவர் விஜயகுமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்தில் ஆனத்தூரை சேர்ந்த துளசிமணி (18), வேலூரை சேர்ந்த கண்டக்டர் புனிதன் (51), குள்ளஞ்சாவடி புலியூர் காலனியை சேர்ந்த பிரகாஷ் (36), ஸ்ரீமுஷ்ணம் ஆதிவராகநல்லூரை சேர்ந்த தேவதாஸ் (22), தஞ்சாவூரை சேர்ந்த வெங்கடேசன் (40), சேத்தியாத்தோப்பை சேர்ந்த கவிதா (39), சோழத்தரத்தை சேர்ந்த சக்திவேல் (53), கடலூர் பாதிரிக்குப்பம் குறிஞ்சிநகரை சேர்ந்த பாஸ்கர் (42), முடிகண்டநல்லூரை சேர்ந்த கவுதமன் (26), காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீரானந்தபுரத்தை சேர்ந்த கமலகண்ணன் (45), விழுப்புரம் மாவட்டம் பள்ளிப்பட்டை சேர்ந்த லாரி டிரைவர் குமரவேல் (38 உள்பட 35 பேர் காயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்சந்தோஷ்முத்து, இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர்.

அவர்கள் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கமலக்கண்ணன் என்பவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

விபத்துக்குள்ளான பஸ்சும், லாரியும் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன. இந்த விபத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News