செய்திகள்

6 ஆயிரம் பேர் பாதிப்பு: டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் - திருநாவுக்கரசர்

Published On 2017-08-13 13:20 IST   |   Update On 2017-08-13 13:20:00 IST
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரசில் புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு உறுப்பினர் படிவங்கள் வினியோகம் செய்து தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடந்தது.

முதல் கட்டமாக ஒரு சட்டசபை தொகுதிக்கு சராசரியாக 10 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். காமராஜர் பிறந்தநாளுக்குள் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.

கட்சி தேர்தல் குறித்து இன்று சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட தலைவர்கள், தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறேன்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 6 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் இறந்திருக்கிறார்கள். டெங்குவை தடுக்க சுகாதாரத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்குவை ஒழிக்க மத்திய அரசு மாநில அரசுக்கு போதிய நிதி வழங்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் இருதய, சிறுநீரக அறுவைச் சிகிச்சைக்கு செலவு அதிகம் ஆவதால் ஏழை - எளியோருக்கு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளில் போதிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதை வேண்டுகோளாக தமிழக அரசுக்கு வைக்கிறேன்.



தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆட்சியில் மெரினாவில் போலீஸ் அனுமதியுடன் நடிகர் சிவாஜி சிலை வைக்கப்பட்டது. தற்போது சிவாஜி சிலை அகற்றப்பட்டு இருப்பது சரியல்ல. சிவாஜி உலக புகழ் பெற்ற மிகப்பெரிய நடிகர்.

காங்கிரசில் காமராஜருக்கு வலது கையாக திகழ்ந்தவர். அவரது சிலையை மீண்டும் மெரினாவில் வைக்க வேண்டும்.

அடுத்த காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டம் ஜெயிலில்தான் நடக்கும் என்று சுப்பிரமணியசாமி கூறியிருக்கிறார். அவர் எப்போதும் கேலி-கிண்டலாக பேசி வருபவர். அதனால் அவரது பேச்சை நான் பொருட்படுத்தவில்லை.

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும். தேர்தல் தேதி அறிவித்த பிறகு பேச்சுவார்த்தை நடக்கும்.

அன்புமணி, அமைச்சர் செங்கோட்டையனை மேடையில் விவாதிக்க அழைப்பது குஸ்தி போடுவது போன்று இருக்கிறது. இதை நான் விளையாட்டாக பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News