செய்திகள்

காஞ்சீபுரம் அருகே விபத்துக்களில் 3 பேர் பலி

Published On 2017-08-11 12:43 IST   |   Update On 2017-08-11 12:43:00 IST
காஞ்சீபுரம் அருகே விபத்துக்களில் 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சீபுரம்:

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுக்கா பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (45) விவசாயி. இவர் காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் உள்ள நண்பரின் வீட்டிற்கு செல்ல அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

காஞ்சீபுரம் அடுத்த பழைய சீவரம் சின்னகாலனி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (23). தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லியில் இருந்து வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வரதராஜபுரம் என்ற பகுதியில் மினிலாரி மோதியதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் இருந்த விஜய் (24), நாராயணன் (27) ஆகியோர் படுகாயங்களுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் கிசிக்சை பெற்று வருகின்றனர். சோமங்கலம் போலீசார் லாரி டிரைவரை கைது செய்தனர்.

காஞ்சீபுரம் அடுத்த உத்திரமேரூர் தாலுகா நெல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம் (50) விவசாயி. இவர் அருகில் உள்ள பாக்கம் கிராம சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார்.

Similar News