செய்திகள்

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2017-04-11 22:54 IST   |   Update On 2017-04-11 22:54:00 IST
அரியலூர் எஸ்.ஆர்.நகரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதிதாக கட்டப்பட்ட ‘பார்’ கட்டிடம் மர்மநபர்களால் இடிக்கப்பட்டது.
தாமரைக்குளம்:

மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அரியலூரில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. அதன்படி அம்மாகுளத்தில் இருந்த டாஸ்மாக் கடையும் அகற்றப்பட்டது. அதற்கு பதிலாக அய்யப்பன் ஏரிக்கு அருகில் எஸ்.ஆர்.நகரில் புதிதாக கடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டிட பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் எஸ்.ஆர்.நகரில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடமும் மனு கொடுக்கப்பட்டது. இருப்பினும் கடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. அதன் அருகே ‘பார்’ அமைக்கும் பணிகளும் நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புதிதாக கட்டப்பட்ட பார் கட்டிடத்தை மர்மநபர்கள் இடித்து தரைமட்டமாக்கினர். இதுகுறித்து அரியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.ஆர்.நகரில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மற்றும் அம்மாகுளம், ரெங்கசமுத்திரம் பொதுமக்கள் அரியலூர்-தஞ்சை சாலை அம்மாக்குளம் பிரிவு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அரியலூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

Similar News