செய்திகள்

ஜெயங்கொண்டம் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2017-04-09 22:20 IST   |   Update On 2017-04-09 22:20:00 IST
ஜெயங்கொண்டம் பகுதியில் டாஸ்மாக் கடை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்:

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை அகற்றகோரி வந்த உத்தரவினால் பல்வேறு இடங்களில் பெரும்பாலான கடைகள் அகற்றப்பட்டன. அவற்றை மாற்று இடங்களில் திறப்பதற்காக அதிகாரிகள் இடங்கள் தேர்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயங்கொண்டம்-திருச்சி சாலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே இருந்த கடை அருகில் உள்ள என்.ஏ.ஜி. காலனியில் மாற்றுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் கடை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்த ஒரு கடையை மாற்றி நெல்லித்தோப்பு - கைலாசபுரம் கிராமத்தின் மத்தியில் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது. அதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் இந்த கடையை அகற்றாவிட்டால் கடை முன்பாக தற்கொலை செய்துகொள்வோம் என ஆவேசமடைந்தனர்.

ஓலையூரில் காலனி தெரு அருகே தற்பொழுது ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் குடிமகன்கள் குடித்துவிட்டு ஆங்காங்கே அலங்கோலமாக கீழே விழுந்து கிடப்பதும், வழியில் செல்வோர்களிடம் வம்பு சண்டை இழுப்பதுமாக உள்ளதால் அக்கடையினை அகற்றக்கோரி நேற்று காலை முதல் இரவு 8 மணிவரை தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம் ஒருபுறம் நடந்த நிலையிலும், போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் வியாபாரம் ஒருபக்கம் நடைபெற்று வந்தது. அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால் அடுத்த நடவடிக்கை எடுப்பது என அப்பகுதி மக்கள் கலந்தாலோசித்து வருகின்றனர்.

இதே போல் தா.பழுர் அருகே கோடாலி கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் அணைக்கரை- சிலால் பிரிவு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News