தலைஞாயிறு அருகே சுத்தியலால் அடித்து பெண் கொலை: மகன் வெறிச்செயல்
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு அருகே உள்ள ஓடாச்சேரியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி கோகிலம் (55).
இவர்களுக்கு முருகானந்தம் என்கிற முருகேசன் (38) என்ற மகன் உள்ளார். ராமசாமி பசுமை வீடு திட்டத்தில் புதிதாக வீடு கட்டி குடியிருந்து வருகிறார். முருகானந்தம் வெளிநாடு சென்று விட்டு சமீபத்தில்தான் ஊருக்கு வந்து இருந்தார்.
அவர் தனது தந்தையிடம் வீட்டை கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ராமசாமியும், அவரது மனைவி கோகிலமும் கூரை வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்று இரவு முருகானந்தம் பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். ஆத்திரம் அடைந்த அவர் சுத்தியலை எடுத்து பெற்றோர் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை கோகிலம் இறந்தார்.
ராமசாமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இக்கொலை குறித்து தலைஞாயிறு போலீசில் புகார் செய்யப்பட்டது. வேதாரண்யம் டி.எஸ்.பி., பாலு உத்தரவின் பேரில் தலைஞாயிறு இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் வழக்கு பதிவு செய்து கொலையாளி முருகானந்தத்தை கைது செய்தனர்.
தாயை மகன் அடித்து கொன்ற சம்பவம் தலைஞாயிறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.