சீர்காழியில் காரை கடத்தி சென்ற 3 பேர் கைது
சீர்காழி:
சீர்காழி அருகே உள்ள பச்ச பெருமா நல்லூரை சேர்ந்தவர் திருஞான சம்பந்தம் (வயது 33). இவர் நேற்று முன்தினம் ஜே.சி.பி எந்திரம் வாங்குவதற்காக தனது உறவினர்கள் பாண்டியன்(30), கொளஞ்சியப்பன்(35) ஆகியோருடன் ஒரு காரில் கடலூர் புறப்பட்டார். அவர்கள் செம்மங்குடியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட சென்றனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் காரை வழி மறித்து நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி காரில் இருந்த திருஞானசம்பந்தம் உள்பட 3 பேரையும் கீழே இறக்கிவிட்டு அவர்கள் ஜே.சி.பி எந்திரம் வாங்க வைத்து இருந்த ரூ. 2 லட்சம் மற்றும் ½ பவுன் நகை ஆகியவற்றை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இது பற்றி சீர்காழி போலீசில் திருஞானசம்பந்தம் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அழகு துரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். நேற்று சீர்காழி சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கடத்தப்பட்ட கார் அந்த வழியாக வந்தது.
அதனை பறிமுதல் செய்து அதில் வந்த சீர்காழியை சேர்ந்த அருண்குமார், சதிஸ்குமார், மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த சந்தானகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் பறித்து சென்ற நகை-பணம் மீட்கப்பட்டு திருஞான சம்பந்தத்திடம் ஓப்படைக்கபட்டது.