செய்திகள்

ஆண்டிமடம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2017-02-21 17:22 IST   |   Update On 2017-02-21 17:22:00 IST
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சூரக்குழி கிராமத்தில் 1500 குடும்பங்களுக்கும்மேல் வசித்துவருகின்றனர். இக்கிராமத்திற்கு கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கொண்டுவந்து இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நீர் ஏற்றப்பட்டு பின்னர் ஒவ்வொரு தெருவிலும் உள்ள சிறிய சின்டிகேட்ஸ் டேங்கிற்கும், தெரு பொதுபைப்பிற்கும் குடிநீர் நிரப்பப்பட்டு பொதுமக்கள் பயனடைந்து வந்துள்ளதாக தெரிகிறது.

ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு முழுமையாக குடிநீர் ஏற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சிறிய சின்ட்டெக்ஸ் டேங்கிற்கும், தெரு பொதுபைப்பிற்கும் குறைந்த அளவே குடிநீர் வந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் ஆத்திரமடைந்த சூரக்குழி கிராம பொதுமக்கள் ஜெயங்கொண்டம்-விருத்தாச்சலம் நெடுஞ்சாலையில் மரியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து பி.டி.ஓ ஸ்ரீதேவி, ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடம் சென்று சம்மந்தப்பட்ட துறையினரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Similar News