செய்திகள்

கருவேப்பிலங்குறிச்சி அருகே செல்போன் பேசியவரின் காதை கடித்து துப்பிய வாலிபர்

Published On 2017-02-07 15:13 IST   |   Update On 2017-02-07 15:13:00 IST
கருவேப்பிலங்குறிச்சி அருகே செல்போன் பேசியவரின் காதை கடித்து துப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் கனகராஜ்(வயது 22). டிப்ளமோ படித்துள்ளார். இவர் கருவேப்பிலங்குறிச்சி அருகே சி.கீரனூர் கிராமத்தில் உள்ள தனது மாமனார் தேவேந்திரன் வீட்டில் தங்கியுள்ளார்.

நேற்று நள்ளிரவு கனகராஜ் சி.கீரனூரில் உள்ள சமுதாயக்கூடம் அருகே சென்றார். அங்கு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் குறளரசன்(24) அங்கு வந்தார். கனகராஜை பார்த்து வெளியூரைச் சேர்ந்த நீ நள்ளிரவில் இங்கு வந்து ஏன் செல்போன் பேசிக்கொண்டிருக்கிறாய். இங்கிருந்து போ என்று கூறினார். அதற்கு கனகராஜ், நான் எனது மாமா வீட்டில் தங்கியிருந்து வருகிறேன். என்னை இங்கிருந்து எப்படி போகச் சொல்லலாம் என்றார்.

இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.

அந்த சமயத்தில் குறளரசன் ஆத்திரமடைந்து கனகராஜின் காதை கடித்து துப்பினார். இதில் அவர் காதில் இருந்து ரத்தம் கொட்டியது. உடனே குறளரசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

கனகராஜின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கனகராஜை விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கனகராஜுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதுதொடர்பாக குறளரசனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தசம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News