செய்திகள்

கருப்பு பண ஒழிப்பை குறை கூறுவதா?: தமிழிசை கண்டனம்

Published On 2016-11-15 07:40 GMT   |   Update On 2016-11-15 08:33 GMT
கருப்பு பண ஒழிப்பை குறை கூறியதற்கு பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்:

பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இடைத்தேர்தல் நெருங்கியிருக்கும் நேரத்தில் நேர்மையாக நடைபெறுமா? என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு அங்கே அதிகளவில் புழங்கி கொண்டு இருக்கிறது. துணை தேர்தல் அதிகாரியோ எந்த ஒரு புகாரும் வரவில்லை என்று சொல்லி இருக்கிறார். தேர்தல் ஆணையம் முழு கவனம் செலுத்தி தேர்தலை நேர்மையாக நடத்த வழிவகை செய்ய வேண்டும்.

மோடி கொண்டு வந்த கருப்பு பணம் ஒழிப்பு திட்டத்துக்கு மக்கள் முழு ஆதரவு தந்துள்ளனர். நான் கூட வங்கிகளுக்கு சென்று பார்க்கும் போது, இது நல்ல நடவடிக்கைதான். இப்போது ஏற்பட்டுள்ளது தற்காலிகமாக சிரமம்தான் என்று பொதுமக்கள் கூறினார்கள்.

மக்களையும், மோடியையும், இனி யாராலும் பிரிக்க முடியாது. மக்களும், பி.ஜே.பி.யும்தான் இனி கூட்டணி. மோடி தனக்கு எவ்வளவு சோதனை வந்தாலும், விமர்சனங்கள் வந்தாலும் பெரிய முடிவை எடுத்திருக்கிறார் என்று மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். மோடி எந்த முடிவை எடுத்தாலும் அது மக்கள் நலனுக்குதான் என்பதை உணர்ந்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மோடி நடிக்கிறார் என்று சொல்லி இருக்கிறார், திருநாவுக்கரசர் சினிமாவில் நடித்துவிட்டு அரசியலில் இருப்பவர்.

ராகுல்காந்தி வங்கி ஏ.டி.எம்.மில் வரிசையில் நின்றது அரசியல் நடிப்பா? குஷ்புவும், திருநாவுக்கரசுவும் எந்த விமர்சனங்களை சொன்னாலும் மக்கள் நம்பமாட்டார்கள்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், மக்கள் வங்கிகளில் வரிசையில் நிற்பதை பிச்சை எடுக்கிற மாதிரி நிற்கிறார்கள் என்று சொல்லி இருப்பது கண்டனத்துக்குரியது.

மக்கள் தன்மானமாக வாழ மோடி இப்படிப்பட்ட அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News