செய்திகள்

டி.என்.பாளையம் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்

Published On 2016-09-28 15:43 IST   |   Update On 2016-09-28 15:43:00 IST
டி.என்.பாளையம் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
டி.என்.பாளையம்:

டி.என்.பாளையம் வனச்சரகத்தில் ஏராளமான வன விலங்குகளான யானை, கரடி, மான், சிறுத்தை, புலி, காட்டெருமை உள்பட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

தற்போது சிறுத்தைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கடந்த 2 மாதங்களாகவே சிறுத்தைகள் வெள்ளாடுகள், மாடுகள், நாய்கள், என கிடைத்தவற்றை அடித்து தின்று விடுகிறது.

கடந்த திங்களன்று மாலை 5 மணியளவில் கொங்கர் பாளையம் பீட் ஆயாகாட்டுத் தோட்டம் அருகே உள்ள மாரியப்பன் என்பவர் தனது வீட்டருகே ஆடுகளை கட்டாந்தரையில் கட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது கர்புர் என உறுமல் சத்தம் கேட்டது. திடுக்கிட்ட அவர் என்னவென்று திரும்பி பார்த்தபோது தனது வீட்டுக்கு எதிரே உள்ள பாறையின் மீது சிறுத்தை ஹாயாக படுத்துக்கொண்டிருந்தது.

இதை அந்த வழியாக வந்த பொதுமக்கள் பார்த்து மிரண்டு போனார்கள். பிறகு அது வனத்திற்குள் சென்றுவிட்டது. கடந்த மாதத்தில் இதே பகுதியில் மாரியப்பன் தனது வீட்டின் முன்பு படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய நாயை 2 சிறுத்தைகள் துரத்திக்கொண்டு வந்தது. நாய் படுத்திருந்த மாரியப்பன் மீது தொப்பென்று விழுந்தது.

திடுக்கிட்ட அவர் எழுந்து டார்ச்லைட் அடித்து பார்த்தபோது பனைமரத்தின் கீழ் 2 சிறுத்தைகள் நின்று கொண்டிருந்தது. உடனே பட்டாசை கொளுத்தி வீசியதால் 2 சிறுத்தைகளும் காட்டுக்குள் சென்றுவிட்டது.

இப்படி அடிக்கடி இந்த பகுதியில் சிறுத்தைகள் நடமாடுவதால் இப்பகுதி மக்கள் வெளியே வரவே அச்சப்படுகின்றனர். வனத் துறையினரும் ரோந்து வருவதில்லை. என இப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு கூறி உள்ளனர்.

Similar News