டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்... மகனின் புகைப்படத்தை பகிர்ந்த ஜாய் கிரிசில்டா
- திருமணம் செய்து ஏமாற்றியதாகவும், கர்ப்பமாக இருந்தபோது தன்னைக் கைவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
- டிஎன்ஏ பரிசோதனைக்கு அண்மையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, சமையல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றியதாகவும், கர்ப்பமாக இருந்தபோது தன்னைக் கைவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். தொடக்கத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த ரங்கராஜ், பின்னர் மாநில மகளிர் ஆணைய விசாரணையின்போது ஜாயை காதலித்ததை ஒப்புக் கொண்டதாகவும், ஆனால் அந்தக் குழந்தைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இந்த விவகாரத்தில் ஜாய் கிரிசில்டாவின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் மாதம்பட்டி ரங்கராஜுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய அண்மையில் உத்தரவிட்டது. இதனிடையே தனது மகன் தொடர்பான புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் ஜாய் கிரிசில்டா.
இந்நிலையில் இன்று மகன் ராகா ரங்கராஜின் முகத்தை காட்டியுள்ளார். இதுவரை முகத்தை மறைத்து பதிவிட்டு வந்த அவர், இன்று மகனின் முகத்தை முழுவதுமாக காண்பித்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும், இருவர் பிரச்சனையில் குழந்தையின் புகைப்படத்தை பயன்படுத்தாதீர் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜாய் தனது முதல் கணவரை ஜூலை 2024-ல் தான் விவாகரத்து செய்த நிலையில், டிசம்பர் 2023-ல் ரங்கராஜைத் திருமணம் செய்ததாகக் கூறுவது சட்டரீதியான கேள்விகளை எழுப்புவதாக நீதிமன்றம் குறிப்பிட்டதும், மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.