Singam Puli | கமல் சார் ஆஃபீஸ்-ல கூப்பிட்டாங்க, நான் நம்பல - சிங்கம் புலி பேச்சால் சிரிப்பலை
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி கடந்த மாதம் வெளியான திரைப்படம் "தாய் கிழவி." ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இந்தப் படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வெளியான பத்து நாட்களில் உலக அளவில் ரூ. 50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.
இந்த நிலையில், தாய் கிழவி திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநரும், நடிகருமான சிங்கம் புலி சமீபத்தில் கமல் ஹாசனை சந்தித்தது குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர், "இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய தம்பி சிவகார்த்திகேயனுக்கும், இயக்குநர் தம்பி சிவகுமாருக்கும் படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. 'மாயாண்டி குடும்பத்தார்', 'மகாராஜா' படங்களுக்குப் பிறகு 'தாய் கிழவி' படத்தில் இந்த கதாபாத்திரத்திற்குதான் எனக்கு அதிக ஃபோன்கால் வந்தது.
படம் வெளியாவதற்கு முன்பு கமல் சாரை பார்க்க வேண்டும் என்ற ஆசையை மேடையில் வெளிப்படுத்தி இருந்தேன். இரண்டு நாட்களில் கமல் சார் அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. முதலில் அந்த அழைப்பு பொய்யாக இருக்குமோ என்றே நினைத்தேன். பிறகு, அவரை சந்தித்த போது கமல் சார் என்னிடம் நீங்கள் ஏன் இதுவரை என்னை சந்திக்காமல் இருந்தீர்கள்? என்றார்.
மேலும், ஸ்ருதியிடம் நான் அவரது பி.ஆர். என்று குறிப்பிட்டார். இவ்வளவு பிஸி ஷெட்யூலிலும் எனக்கு நேரம் ஒதுக்கி கமல் சார் என்னிடம் பேசியதற்கு அவரிடம் நன்றி தெரிவித்தேன். அவர் அதற்கு, எனக்கு சினிமா பிடிக்கும் என்றார்," தெரிவித்தார்.
நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள `தாய் கிழவி' திரைப்படத்தில் சிங்கம் புலி, அருள் தாஸ், பால சரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.