செய்திகள்

மினிவேன் மோதி முதியவர் பலி: வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2016-09-23 21:33 IST   |   Update On 2016-09-23 21:34:00 IST
தா.பழூர் அருகே மினிவேன் மோதி முதியவர் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த அணைக்குடம் காலனி தெருவை சேர்ந்தவர் நந்தன் (வயது 65). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள கடைக்கு செல்வதற்காக சைக்கிளில், கும்பகோணம்–ஜெயங்கொண்டம் சாலையை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த மினிவேன் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நந்தனை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நந்தன் பரிதாபமாக இறந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கும்பகோணம்–ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், இச்சாலையில் வேகத்தடை இல்லாததால் அதிகளவு விபத்து ஏற்படுகிறது.

எனவே மேற்கண்ட சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். மேலும் கனரக வாகனங்களை சீராக இயக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து தகவலறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் கும்பகோணம்–ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News