செய்திகள்
வி.கைகாட்டி அருகே தனியார் கல்லூரி பஸ் விபத்து: 4 பேர் படுகாயம்
வி.கைகாட்டி அருகே பஸ் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து புளியமரத்தில் மோதி 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூரில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்கு அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் கல்லூரி பஸ்சில் சென்று படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கல்லூரி மாணவர்கள் பஸ்சில் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது வி.கைகாட்டி அருகே வந்த போது பஸ் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து புளியமரத்தில் மோதியது. இதில் பஸ்சில் இருந்த ரெட்டிபாளையம் சேர்ந்த மகேந்திரன் (21), உத்திராபதி (28), ஜெயராஜ் (19), பாலமுருகன் ஆகிய 4 மாணவர்களும் படுகாயம் அடைந்தனர்.
இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் தனியார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஸ்சில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து கயர்லாபாத் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.