செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே பஸ்–லாரியின் இடையே சிக்கி 14 மாடுகள் பலி

Published On 2016-04-03 18:29 IST   |   Update On 2016-04-03 18:29:00 IST
ஜெயங்கொண்டம் அருகே பஸ்–லாரி இடையே சிக்கி 14 மாடுகள் பலியான சம் பவம் பரபரப்பை ஏற்ப டுத்தி யுள்ளது.
ஜெயங்கொண்டம்:

விழுப்புரம் மாவட்டம் மயிலங்குப்பத்தை சேர்ந்தவர் பஞ்சமூர்த்தி (வயது 50). மயிலாடுதுறை அருகே உள்ள மாங்குடியை சேர்ந்தவர் ரவி (55). விருத்தாச்சலம் அருகே உள்ள பிஞ்சானூரை சேர்ந்தவர் துரை. கிடை மாடுகள் மூலம் தொழில் செய்து வரும் இவர்கள், ஒவ்வொரு ஊராக மாடுகளை அழைத்து சென்று, அதன் மூலம் கிடைக்கும் சாணத்தை வயல்களுக்கு உரமாக கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை சுமார் 250 மாடுகளை விழுப்புரம் மாவட்டம் மங்களம்பேட்டையில் இருந்து நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு சாலை வழியாக அழைத்து சென்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடம் கூவத்தூர் அருகே செல்லும் போது அந்த வழியாக சென்னையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு மீன்களுக்கான தீவனம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. லாரி டிரைவர் மாடுகள் மீது மோதாமல் இருக்க லாரியை ஓரமாக ஓட்டிச் சென்றார்.

அப்போது எதிரே ஜெயங்கொண்டத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி தனியார் பஸ் வேகமாக வந்தது. திடீரென அந்த பஸ் மாடுகள் கூட்டத்திற்குள் புகுந்தது. பின்னர் லாரி மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில் லாரி–பஸ்சின் இடையில் சிக்கி 14 மாடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன.

3 மாடுகள் பலத்த காயமடைந்தன. இந்த விபத்தில் லாரி மற்றும் பஸ்சின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. பஸ் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விபத்து நடந்ததும் பஸ் டிரைவர் கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மற்றும் லாரி டிரைவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த முருகன் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் தப்பியோடிய பஸ்–லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ் மோதி 14 மாடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News