கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி 2 வாலிபர்கள் பலி- 2 பெண்கள் படுகாயம்
- தகவல் அறிந்ததும் சதுரங்கப்பட்டினம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கூவத்தூர் அடுத்த அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(வயது19). இவர் உறவினரான அதே பகுதியை சேர்ந்த சுகந்தி(19)என்பவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து க்கொண்டு கல்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது கூவத்தூரை அடுத்த சின்னகுப்பம் பகுதியை சேர்ந்த கவுதம்(26) என்பவர் தனது மனைவி அஸ்வினியுடன்(20) மோட்டார் சைக்கிளில் கல்பாக்கத்தில் இருந்து சின்னகுப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது பாஸ்கர் மற்றும் கவுதம் ஆகியோர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்கள் திடீரென நேருக்கு நேர் மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். கவுதம், சுகந்தி, அஸ்வினி ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
தகவல் அறிந்ததும் சதுரங்கப்பட்டினம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த காயம் அடைந்த கவுதம் உள்பட 3 பேரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே கவுதமும் உயிரிழந்தார்.
சுகந்தி, அஸ்வினி ஆகிய இருவருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக சதுரங்கப் பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.