உள்ளூர் செய்திகள்

வீரவநல்லூர், நாங்குநேரியில் வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் நீரில் மூழ்கி சாவு

Published On 2022-09-25 14:11 IST   |   Update On 2022-09-25 14:11:00 IST
  • போலீசார் தேடியபோது இசக்கிராஜ் ஆற்றில் மூழ்கி இறந்தது தெரியவந்தது
  • ஆறுமுகரெட்டி நாங்குநேரி பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

நெல்லை:

முக்கூடல் அருகே உள்ள ஓடைக்கரை துலுக்கப்பட்டி மெயின்ரோட்டை சேர்ந்தவர் இசக்கிராஜ்(வயது 59). தொழிலாளி.

ஆற்றில் மூழ்கி பலி

இவர் தினமும் வேலைக்கு சென்றுவிட்டு முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்வது வழக்கம். சம்பவத்தன்று ஆற்றில் குளிக்க மோட்டார் சைக்கிளில் அவர் சென்றார். வெகுநேரமாகியும் அவர் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது கரையில் அவரது மோட்டார் சைக்கிள் மட்டும் நின்றது.

உடனே வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று தேடியபோது இசக்கிராஜ் ஆற்றில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாங்குநேரி

குஜராத் மாநிலம் அகமதாபாத் நரங்கசுரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகரெட்டி(வயது 60). இவர் நாங்குநேரி பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். நேற்று நாங்குநேரி தெப்பகுளத்திற்கு சென்ற அவர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்தார்.

அங்கு பிணமாக மிதந்து கொண்டிருந்த அவரது உடலை நாங்குநேரி போலீசார் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News